கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள் – மட்டு.நகரான்

கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள்மட்டு.நகரான்

கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள்: அன்று தந்தை செல்வா கூறியது போன்று இனி தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற வாசகத்தினை உண்மையாக்கும் வகையிலான செயற்பாடுகள், இன்று வடகிழக்கில் தமிழ் மக்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப் படுகின்றன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில், தினமும் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையினை எதிர்கொள்கின்றனர். சிறுபான்மையினத்தவர்கள் கேட்க நாதியற்றவர்கள் என்ற வகையிலான செயற்பாடுகளை பெரும்பான்மையினத்தவர்கள் முன்னெடுக்கும் நிலையினையே காணமுடிகின்றது.

தமிழர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான செயற்பாடுகள் மிகவும் நுட்பமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் எல்லைப் பகுதிகளிலிருந்து தமிழ் மக்களை விரட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகள் தொடர்ச்சியாகப் பெரும்பான்மை சமூகத்தின் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருகின்றமையை அண்மைக் காலமாக நடைபெற்று வரும் தொடர்ச்சியான பல சம்பவங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன.

 தமிழரின் பூர்வீக நிலங்கள்அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடமுனை, ஊத்துச்சேனை கிராம மக்கள் கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மூலம் குறித்த பகுதியில் பெரும்பான்மை யினத்தவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் பல வெளிச்சத்துக்கு வந்தாலும், வடமுனை ஊத்துச்சேனை பிரதேசமானது தொடர்ச்சியாக சிங்கள பெரும்பான்மையினத்தவர்களினால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியே வருகின்றது.

வடமுனை, ஊத்துச்சேனை பிரதேசம் என்பது தமிழர்கள் ஆதிகாலம் தொட்டுவாழும் பகுதியாகும். காடு சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்கள், தமது அன்றாட தேவையினைத் தாங்களே பூர்த்திசெய்யும் நிலையிலிருந்தாலும், கடந்தகாலப் போராட்டம் காரணமாக அவர்களின் நிலைமையென்பது சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக மாறியுள்ளது.

வடமுனை, ஊத்துச்சேனைப் பிரதேசமானது மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் வெலிக்கந்தை சந்தியிலிருந்து 18கிலோ மீற்றர் தூரத்தில் காட்டுப் பகுதியையும் இயற்கை வளங்களையும் ஊடறுத்துச் செல்லும் பகுதியாகும். அங்குள்ள இயற்கையினைக் கொண்டே அதிகளவில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வயல் செய்கை, காடுகளில் தேன் மற்றும் வேட்டையாடுதல், மீன்பிடி போன்ற தொழில்களில் இப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. வடமுனை, ஊத்துச்சேனைக்கு அருகில் வேறு கிராமங்கள் கிடையாது. காடுகளுக்கு மத்தியிலேயே அந்த கிராமங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக இக்கிராம மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த கிராமங்களைப் பொறுத்தவரையில், யுத்த காலத்தில் தமிழர்களின் வீரத்தினை உலகமெங்கும் வெளிப்படுத்துவதற்கு இங்கும் பலர் மாவீரர்களாக இருந்துள்ளதுடன், இப்பிரதேசம் யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய கேந்திர நிலையமாகவும் காணப்பட்டது.

கிழக்கின் படுவான்கரையிலிருந்த விடுதலைப்புலிகளின் வடக்கு நோக்கிய நகர்வுக்குப் பிரதான இடமாக இந்த வடமுனை பகுதியிருந்தது. வடமுனைப் பகுதியானது, தனியான கேந்திர நிலையமாக விடுதலைப்புலிகளினால் பிரகடனப் படுத்தப்பட்டதால் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களின் கண்களிலும்  ஓருபார்வையிருந்தே வந்தது.

கிழக்கில் உள்ள போராளிகள் வடக்கு நோக்கி நகர்வதற்கு வாகரையூடாகச் சென்று அங்கிருந்து படகு மூலம் வடக்குக்குச் செல்வதற்கு இந்த பாதையூடாக வந்து வடமுனை ஊத்துச்சேனை ஆகிய பகுதிகளில் பதுங்கியிருந்து இராணுவத்தின் பிரசன்னம் குறைவாகியிருக்கும் நேரத்தில் கொழும்பு-மட்டக்களப்பு வீதியை குறுக்கறுத்து வாகரைக்கு சென்று, அங்கிருந்து வடக்கு நோக்கி செல்லும் நிலையிருந்தது. இதன் காரணமாக இப்பகுதி விடுதலைப்புலிகளின் காலத்தில் அனைவராலும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட போதிலும், இன்று இப்பகுதி எவராலும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதே கவலைக் குரியதாகும்.

யுத்த காலத்திற்கு முன்பிருந்த காலம் தொடக்கமே இப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்வதற்கான பல முயற்சிகளும் பல்வேறு காலப் பகுதிகளிலும் முன்னெடுத்துவந்த போதிலும் அவை தடுக்கப்பட்டே வந்துள்ளன.

மட்டக்களப்பின் முன்னாள் அமைச்சர் தேவநாயகம் காலப்பகுதியில் இப்பகுதியில் சிங்களவர்கள் குடியேற முற்பட்டபோது அமைச்சர் அங்கு சென்று அவர்களை அடித்து துரத்தியதாகவும் தகவல்கள் இருக்கின்றன. இவ்வாறான முக்கியத்துவம்வாய்ந்த, தமிழர்களின் இருப்பாக கருதப்படும் இப்பகுதியைப் பாதுகாப்பதற்குத் தமிழர்கள் தவறிவருவது கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

20201213 010842 கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள் - மட்டு.நகரான்குறிப்பாக இப்பகுதியைப் பொறுத்த வரையில், தமிழ்த் தேசியத்தினை நேசிக்கும் மக்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். அதன் காரணமாக கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களுக்கு இப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் ஆதரவளிப்பது என்பது மிகவும் குறைவான காரணத்தினால், ஆட்சியிலிருக்கும்போது இவர்கள் இப்பகுதி தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவானதாகவே யிருந்துவருகின்றது.

தமிழ்தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளுக்கு இந்த மக்கள் ஆதரவளிக்கின்ற போதிலும், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளிலிருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னர் இப்பகுதிக்குச் செல்லாத நிலையே காணப்படுகின்றது. இப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்காத நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில்தான் இன்று வடமுனை, ஊத்துச்சேனையினைச் சூழ சிங்களப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களினால் காடுகள் அழிக்கப்பட்டு, மணல் கொள்ளைகள் பாரியளவில் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த மண் அகழ்வுகள் காரணமாக குறித்த பகுதியின் இயற்கை அழிக்கப்படுவதுடன், வீதிகள் மிக மோசமான முறையில் பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும் என்பதை இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஊடாக முன்வைத்தனர்.

 தமிழரின் பூர்வீக நிலங்கள்மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் எந்தவித அனுமதியுமின்றி பொலநறுவை மாவட்டத்தில் உள்ளவர்களினால் பெருமளவான லொறிகள், ட்ரக்டர்கள் பயன்படுத்தப்பட்டு இந்த கொள்ளைகள் முன்னெடுக்கப்படுவதானது வெறுமனே மண் கொள்ளை என்பதால் மட்டும் வரையறுக்க முடியாது. இதுவொரு திட்டமிட்ட குடியேற்றத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.

2012ஆம் ஆண்டு இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மகாவலி அபிவிருத்தி திட்டம் மூலம் காணிகள் வழங்கப்பட்டு சேனைபயிர்ச் செய்கை என்ற கருத்திட்டத்தினைக் கொண்டு முன்னெடுக்கப்படவிருந்த பாரியளவிலான குடியேற்ற நடவடிக்கைகள் அன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட அழுத்தங்கள் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டது.

images 1 கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள் - மட்டு.நகரான்அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு இப்பகுதியில் 400குடும்பங்களுக்கு காணிகள் உள்ளதாகவும் யுத்த காலத்தில் அவர்கள் இடம்பெயர்ந்ததாகவும் கூறி குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அடித்தளம் இடப்பட்ட போதும், அவையும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதி மக்களுக்கு அடிப்படைவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காமல் அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் வகையான செயற்பாடுகளே தொடர்ச்சியாக முன்னெடுக்கப் படுகின்றன.

வடமுனை,ஊத்துச்சேனை மக்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் 09ஆம் தரம் மட்டுமே உள்ளது. அதற்கு பின்னர் கல்வி கற்பதற்கு வாழைச்சேனைக்கு சுமார் 40கிலோமீற்றர் தூரத்திற்கு வரவேண்டும் என்பதனால் பாடசாலை கல்வியை இடைநிறுத்த வேண்டிய சூழ்நிலை, சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு 18கிலோமீற்றர் தூரம் உள்ள வெலிக்கந்தைக்கே வரவேண்டும். இரவில் நோயினால் பாதிக்கப்படும் ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத காரணத்தினால் உயிரிழக்கும் நிலையே காணப்படுகின்றது. வீதிகள் இதுவரையில் அமைக்கப்படாத காரணத்தினால் மிகவும் கஸ்டத்தின் மத்தியிலேயே பயணம் செய்யும் நிலை காணப்படுகின்றது.

இப்பகுதியானது சுற்றுலாத்துறை மற்றும் இயற்கை வளங்களைக் கொண்ட அழகிய பகுதியாக காணப்படுவதன் காரணமாக இப்பகுதியில் மக்களை வளப்படுத்து வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளபோதிலும், தமிழர்கள் என்ற காரணத்தினால் இப்பகுதி வளப்படுத்தால் வளங்கள் சூறையாடப்படுகின்றன.

இக்கிராமங்களை ஊடறுத்து பெரும்பான்மையினம் ஆக்கிரமிப்புகளை செய்யுமானால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பு என்பது கேள்விக்குறியாக மாறும் நிலையுருவாகியுள்ளது. இங்குள்ள தமிழ் மக்கள் இந்த நிலைமையினை உணர்ந்தமையினை அண்மையில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மூலம் உணரமுடிகின்றது.

நடைமுறையில் நாங்கள் சிங்கள பெரும்பான்மையினத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்து சர்வதேசம் வரையில் வாய்கிழிய கத்தினாலும் அது கத்தலுடன் மட்டுமே முடிந்துவிடுகின்றது. ஆனால் ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதற்கான சமிக்ஞைகள் வெளியிடப்பட்டும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அதன் பாதிப்பு தமிழ் மக்களையே சாரும் என்பதை தமிழ் தேசிய கட்சிகள் உணர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

Tamil News