ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள், தனிநபர் தடைகளையும் நீக்குக – ரெலோ கோரிக்கை

இலங்கைக்குள் தடை செய்யப்பட்ட 6 தமிழ் அமைப்புக்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.  இந்த நிலையில், ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள், தனிநபர் தடைகளையும் நீக்க வேண்டும் என ரெலோ இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியின்  ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்,

“எமது தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் அண்மையில் சில புலம்பெயர் அமைப்புகளின்  தடைகளை நீக்கி உள்ளதை வரவேற்கிறோம்.  அதே நேரம் இன்னும் பல அமைப்புகளும் தனி நபர்கள் உடைய பெயர்களும் தடைசெய்யப்பட்ட பட்டியலிலேயே காணப்படுகிறது. அவர்கள் மீது உள்ள தடையை நீக்குமாறு நாம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கோருகிறோம்.

நமது கோரிக்கையின் பிரதான காரணம் நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு முதலீடு மிக அவசியமாகிறது.  புலம்பெயர் உறவுகள் பலர் இங்கு முதலீடு செய்வதில் இருக்கக்கூடிய பிரதான சிக்கல் பாதுகாப்பின்மை ஆகும்.  தாங்கள் பாரிய முதலீடுகளை இங்கு ஏற்படுத்திய பின்னர் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக காரணம் காட்டி தங்கள் முதலீடுகளை முடக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யவும் முடியும் என்று அச்சம் கொள்கிறார்கள்.  முகநூல் இணைப்புக்களை காரணம் காட்டியே பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

 எனவே முதலீடு செய்யத் தயாராக இருக்கும் புலம்பெயர் உறவுகள் அச்சமின்றி தங்கள் முதலீடுகளை செய்வதற்கு இந்த தடைகளை நீக்குவது அவசியம் என்று உங்களிடம் சுட்டிக் காட்டியுள்ளோம்.  ஆகவே இதைக் கருத்தில் கொண்டு  ஏனைய புலம்பெயர் அமைப்புகளையும் தனிநபர்களின்  பெயர்களையும் நீக்குமாறு கோருகிறோம்”. என்று கூறியுள்ளார்.