இலங்கைக்கான பயணத் தடையை நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஏனைய நாடுகளிடம் கோரிக்கை

இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் வர்த்தக மற்றும் தொடர்பாடல் பிரிவின் தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் வழங்கப்பட்ட கடன் சலுகைகளை நீடிக்குமாறு அவர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு உதவிகளை வழங்குமாறும், சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பைப் பலப்படுத்துமாறும் சர்வதேச சமூகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamil News