“சர்வதேசத்தால் மட்டுமே எமக்கானத் தீர்வை வழங்க முடியும்“ – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

168 Views

IMG 20210730 095223 1 1 “சர்வதேசத்தால் மட்டுமே எமக்கானத் தீர்வை வழங்க முடியும்“ - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதன் ஊடாகவே எமக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என்று காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் நீதி வேண்டி அவர்களின் உறவினர்களால் இன்று  வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன.

received 533519981101521 “சர்வதேசத்தால் மட்டுமே எமக்கானத் தீர்வை வழங்க முடியும்“ - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

அதில் வவுனியா மாவட்டத்தில் போராட்டத்தை முன்னெடுத்த உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

“எமக்கு சர்வதேச நீதி கிடைப்பதற்காக நாம் போராடி வருகின்றோம். இன்று பல்வேறு அமைப்புகளையும், கட்சிகளையும் சார்ந்தவர்கள் சர்வதேச நீதி கிடைப்பதற்கு தடையாக இருந்து அரசை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு எம்மை அழைத்து செல்வதற்கான நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை வருடங்களாக வெயிலிலும் , மழையிலும் நாம் போராடி கொண்டிருந்த போது அவர்களது அக்கறை எங்கே போனது.

எமது போராட்டம் வியாபார நோக்கத்திற்கானதல்ல சுயநலத்திற்கானதல்ல. எமது அன்பான உறவுகளின் உயிருடன் தொடர்புபட்டது.

எமக்கான நீதி விரைவில் கிடைக்கும் என்பதற்காகவே தொடர்ச்சியாக போராடுகிறோம். எமக்கு வாழ்வாதாரம்  கிடைக்க வேண்டும் என்பதற்காக இல்லை” என்றனர்.

அதே நேரம் மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

2009ம் ஆண்டு போர் நடைபெற்ற இறுதிப் பத்து நாட்களில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் வலிந்து காணாமல் ஆக்கப் பட்டுள்ளார்கள். சர்வதேச விசாரணை ஒன்று மட்டுமே எமது பிள்ளைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வழிசெய்யும்  என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

ஆனால் இந்த சர்வதேசம் மௌனமாக இருக்கின்றது ஏன் என்று எமக்கு தெரியவில்லை.

இலங்கை அரசை நாங்கள் நம்பவில்லை காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு முடிவு என்ன? ஏனெனில் எமக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறதுது. எமது பிள்ளைகளுக்காக போராடுவதற்கு எமது உடம்பில் தெம்பு இல்லை .நாங்கள் தொலைத்தது   நாங்கள் 10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளை. அந்த பிள்ளைகளுக்காக இன்று நாங்கள் ரோட்டில் நின்று போராடிக் கொண்டிருக் கின்றோம். இதனை அனைத்து சர்வதேச அரசாங்கங்களும் கவனத்தில் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply