கலப்பு தேர்தல் முறைதான் நாட்டுக்கு பொருத்தமானது; தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்

267 Views

கலப்பு தேர்தல் முறைதான் நாட்டுக்கு பொருத்தமானது
மக்கள் பிரதிநிதிகளை மீள அழைத்துக் கொள்வதற்கான பொறிமுறை இருக்கவேண்டும். இதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும். அதேவேளை கலப்பு தேர்தல் முறைதான் நாட்டுக்கு பொருத்தமானது என்பதே தேர்தல்கள் ஆணைக் குழுவின் நிலைப்பாடு என்று அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேர்தல்சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. இங்கு அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஆகப்பேணப்பட வேண்டும் இதில் 140 பேர் தொகுதிவாரி முறையிலும், 70 பேர் மாவட்ட விகிதாசார முறையிலும், 15 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்பட வேண்டும்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை முடிவடைந்ததும் வேட்பாளர்கள் தபால் மூல வாக்கைப் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் . சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு தபால்மூல வாக்குகளைப் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். முற்கூட்டியே வாக்குகளை அளிப்பதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்காக விசேடமான வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளை மீள அழைத்துக் கொள்வதற்கான பொறிமுறை இருக்க வேண்டும் இதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும்.

புதிய திருத்தங்களின்போது இரட்டை வாக்குச் சீட்டுக்களைப் பயன்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் தேர்தல் குற்றங்கள் குறித்து வழக்குத் தாக்கல் செய்யும் உரிமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும். தேர்தல்களுக்கான நியாயமன்றம் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்றும் நிமல் புஞ்சிஹேவா பாராளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டினார்.

20ஆவது அரசியல் திருத்தத்தின் பின்னர் ஊடகங்களுக்கான அளவுகோல்கள் அரசாங்க ஊடகங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது தனியார் ஊடகங்களுக்கும் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்றும் நிமல் புஞ்சிஹோவா அவர்கள் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பிலும் பாராளுமன்ற விசேடகுழுவில் கலந்துரையாடப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.

பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டத்தில் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார,மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply