“ஒரு நாடு ஒரு சட்டம்” வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும்- ஆயர்கள் பேரவை கோரிக்கை

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் செயலணியொன்றை நேற்று முன்தினம் உருவாக்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே அதற்குத் தலைவராக சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்துள்ளமை பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. செயலணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும் என ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையினுள் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றைத் தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதலும் இந்த செயலணியின் பிரதான பணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், சட்டரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படாமல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால், “ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற நோக்கத்தை ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அற்றுப் போயுள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை சுட்டிக் காட்டியுள்ளது.

செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டவரின் கடந்த காலங்களை கருத்திற் கொள்ளாமல், தமிழ், இந்து, கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்காது, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதால் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதாகவும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தின் முன்பாக, சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் அரசியலமைப்பு உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கையூடாக கோரிக்கை விடுத்துள்ளது.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad “ஒரு நாடு ஒரு சட்டம்” வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும்- ஆயர்கள் பேரவை கோரிக்கை