OCI அட்டை வைத்திருபோருக்கு  விதி தளர்வை அறிவித்தது இந்தியா

Overseas Citizens of India (OCI) என்று அழைக்கப்படுகின்ற இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டை வைத்திருபோருக்கு இந்திய அரசு விதி தளர்வை அறிவித்துள்ளது.

OCI அட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் வாழலாம் என்ற சலுகையை இந்தியா வழங்குகிறது. மேலும் வாக்களிக்கும் உரிமை, அரசு சேவை மற்றும் விவசாய நிலங்களை வாங்குவதைத் தவிர பல சலுகைகளையும் அவர்களுக்கு வழங்குகிறது. முக்கியமாக OCI அட்டை அவர்களுக்கு இந்தியாவுக்கு விசா தேவைப்படாத பயணத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியா அறிவித்துள்ள இந்த புதிய விதி தளர்வின்படி, இனிமேல் ஒருவர் தங்கள் பழைய அல்லது  காலாவதியான வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை அல்லது கடவுச்சீட்டுகளை இந்தியாவுக்கான பயணத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையில்லை என்று அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

 தற்போது இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டை வைத்திருக்கும் ஒருவர் இந்தியா செல்லும்போது விசா எடுக்க தேவை இல்லை. என்றாலும், அவர் இந்தியாவுக்கு நுழையும்போது OCI அட்டையுடன் கூடவே அவர் OCI அட்டையை முதலில் பெற்றபோது அவரிடம் இருந்த அந்த வெளிநாட்டு பாஸ்போர்டை அல்லது கடவுச் சீட்டையும் எடுத்துச் செல்லவேண்டும் என்பது விதியாகும்.

 பலர் இப்படி காலாவதியான அல்லது முந்தைய பாஸ்போர்டை அல்லது கடவுச் சீட்டை எடுத்துச்செல்லாமல் போகும்போது பெரும் சிக்கலை எதிா்கொள்வதுடன்   பழைய கடவுச் சீட்டு அல்லது பாஸ்போர்ட் எடுத்துவராத காரணத்தினால் சில பயணிகள் இந்தியாவுக்கு செல்ல விமானங்களில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் பழைய வெளிநாட்டு பாஸ்போர்ட்களை எடுத்துச் செல்லாததால் விமான நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாகவும்   தகவல் வெளியாகியிருந்தன.

 எனவே இனிமேல் இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டை வைத்திருக்கும் ஒருவர் இந்தியா செல்லும்போது தங்கள் பழைய, காலாவதியான பாஸ்போர்ட்டை கட்டாயம் கூடவே கொண்டுவரவேண்டும் என்ற விதியை தாம் தளர்த்துவதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. ஆனால் அவர்கள் தங்களின் வெளிநாட்டு பாஸ்போர்ட் அல்லது கடவுச்சீட்டை இந்தியா வரும்போது கட்டாயம் கொண்டுவரவேண்டும் என்று அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.