2022இல் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறாது-நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவிப்பு

406 Views

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு
2022 ஆம் ஆண்டு பொதுத்துறைக்கு புதிய ஆட்சேர்ப்புக்கள் இடம்பெறாது என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாகன இறக்குமதிக்கான தடை தொடரும் என்றும் பால்மா இறக்குமதிக்கு பணம் ஒதுக்க முடியாது எனவும் கூறியுள்ள அவர், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களும் மட்டுப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை விவசாயத் துறை அமைச்சில் இடம்பெற்ற பால் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் கூட்டத்திலேயே இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டார்.

மேலும், சில அரச நிறுவனங்களில் ஆளணிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. சில பிரதேச செயலகங்களில் உட்காருவதற்கு நாற்காலிகூட இல்லை. எனவே, அடுத்த வருடம் முழுவதும் எந்த ஒரு பொதுத்துறை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறாது.

நாட்டின் பொருளாதாரம் கடுமையான டொலர் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. இதனால், கடந்த 4 மாதங்களாக கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எவ்வாறிருப்பினும், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கும்.

2022 வரவு – செலவு திட்டத்தின் மூலம் நாட்டில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். தற்போது வெளிநாட்டு கையிருப்பு பிரதான பிரச்னையாகவுள்ளது.

அரசாங்கத்திடமிருந்த கையிருப்பு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து, எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும் அரசமுறை கடன்களை மீள செலுத்தவும் செலவழிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கும் இனி மட்டுப்பாடு விதிக்கப்படும். பால் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் பால்மா இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருடத்துக்கான பால்மா இறக்குமதிக்கு நிதி ஒதுக்க முடியாது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்த நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad 2022இல் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறாது-நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவிப்பு

Leave a Reply