இணைந்து செயற்பட புதிய கட்டமைப்பு அவசியமில்லை- தமிழரசுக் கட்சி முடிவு

ITAK இணைந்து செயற்பட புதிய கட்டமைப்பு அவசியமில்லை- தமிழரசுக் கட்சி முடிவுதமிழ் கட்சிகள் இணைந்து அரசியல் ரீதியாகச் செயற்படுவதற்கு புதிய கட்டமைப்பு எதையும் உருவாக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நேற்றைய அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டதாக அறிய வந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை 5 மணி தொடக்கம் சுமார் இரண்டரை மணி நேரம் இக்கூட்டம் நடை பெற்றது. கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், கலையரசன், பதில் பொதுச் செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் பங்கு பற்றினர். கட்சியின் இரு சிரேஷ்ட துணைத் தலைவர்களான செல்வராசா, சி.வீ.கே.சிவஞானம் மற்றும் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், முன்னாள் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தின் ஆரம்பத்தில் புதிய அரசமைப்பு முயற்சி, கூட்டமைப்புடனான பேச்சுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு போன்றவற்றை ஒட்டி நீண்ட ஒரு மணி நேர விளக்கம் ஒன்றை அளித்தார் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கூட்டமைப்பு வலிமையான வற்புறுத்தலை விடுக்காமல் இருப்பது, தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தெளிவு படுத்தப்படாமல் இருப்பது ஆகியவை பற்றியும் பிரஸ்தாபிக்கப் பட்டது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவை இன்று கூட்டி இது குறித்து ஆராய்ந்த பின்னர், கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தி அறிவிப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது.

இதே சமயம், தமிழ்த் தேசியத் தரப்புகளை ஒன்றிணைக்கும் முகமாக ரெலோவின் தரப்பினால் முன்னெடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அவை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பிரதிபலிப்பு பற்றியும் நேற்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப் பட்டடது. ஏற்கனவே இத்தகைய முயற்சி ஒன்று ஆண்டு முற்பகுதியில் எடுக்கப் பட்ட போது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற் குழு அது குறித்து ஆராய்ந்து முடிவு செய்திருந்தது. அந்த முடிவில் மாறாத நிலைப் பாட்டை கட்சி பேண வேண்டும் என்று நேற்றுத் தீர்மானிக்கப் பட்டது.

நாடாளு மன்றத்தில் அங்கம் வகிக்கும் மூன்று தமிழ்க் கட்சிகளும் (கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி) தேவையான சமயங்களில் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரை ஒட்டிய பொது விண்ணப்பம், மகாவலி அபிவிருத்தியின் பெயரில் காணி அபகரிப்பு முயற்சியை எதிர்ப்பது போன்ற பொது விடயங்கள் யாவற்றிலும் மூன்று கட்சிகளும் ஒன்று பட்டு செயற் படுகின்றன.

எனவே தனியான கட்டமைப்பு ரீதியான செயற் பாட்டுக்கோ முயற்சிக்கோ தேவை யில்லை. இந்தக் கட்சிகள் பலவும் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து போனவை தான். அவை விரும்பினால் திரும்பி வந்து சேரலாம். வாசல் திறந்தே உள்ளது. அப்படி இருக்கையில் புதிய அமைப்பு முயற்சி ஏதும் தேவையில்லை என்பதே தமிழரசு மத்திய குழு ஏற்கனவே எடுத்த முடிவு. அதையே கட்சி பின்பற்ற வேண்டும். மாறிப் போகக் கூடாது.

பிரச்சினை களையும் தேவை களையும் ஒட்டி அவற்றைக் கையாள் வதற்காக அவ்வப் போது தமிழ்த் தரப்புகள் சேர்ந்தும், ஒன்றித்தும் பயணிக்க முடியும். அதற்குத் தடை ஏதும் கிடையாது. எனவே தனியான கட்டமைப்பு உருவாக்க முயற்சி ஏதும் தேவையாக இல்லை. அத்தகைய எத்தனங்களில் தமிழரசுக் கட்சி பங்கு பற்ற வேண்டிய அவசியமும் இல்லை” என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 இணைந்து செயற்பட புதிய கட்டமைப்பு அவசியமில்லை- தமிழரசுக் கட்சி முடிவு