”ஆசியாவின் எழுச்சியை சீனாவே வழி நடத்தும்” இலங்கை பிரதமர்

119300404 mahinda 03 ''ஆசியாவின் எழுச்சியை சீனாவே வழி நடத்தும்" இலங்கை பிரதமர்

‘இனி ஆசியாவின் எழுச்சியை சீனாவே வழிநடத்தும் என்பதுதான் யதார்த்தம்’ எனத் தெரிவித்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ‘சீனாவே தமது உண்மை நண்பன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவில் இணைய வழியாக  கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது உரையில், “சீனா எமது வரலாற்று நட்பு நாடாகும். அந்த நீண்ட வரலாற்றில் சீனா எம்முடன் செயற்பட்டுள்ள விதத்துக்கு அமைய, சீனா எமக்குள்ள உண்மையான நண்பர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவை அங்கீகரிக்கும் பொருட்டும், ஒரு நினைவு நாணயத்தை தாம் வெளியிட்டுள்ளோம். நாம் 1957ஆம் ஆண்டிலேயே சீன அரசாங்கத்துடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினோம். சீனாவை ‘சுதந்திர சீனா’வாக மாற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் எமது நாடு ஏற்கனவே இடதுசாரி வணிக உறவுகளைப் பேணி வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியே தற்போது உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும். அந்த அரசியல் கட்சியின் வெளிநாட்டு உறவுகள் குறித்த கொள்கைக்கு அமைய, 70 ஆண்டுகளாக உலகுக்கு மிக முக்கியமான ஒரு செய்தியை அது வழங்கியுள்ளது என்பதனை நான் கூற வேண்டும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுதான் சீனாவை உலக அரங்குக்கு உயர்த்தியது என்பது எனக்குத் தெரியும். சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை. பிற நாடுகளின் விவகாரங்களை தாம் ஒழுங்குறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்ற உணர்வை சீனா ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. சீனா தனது சொந்த அடிப்படையில் பிற நாடுகளுக்கு உதவியது.

ஒரு நாட்டின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் இது மிகவும் முக்கியமானது. அந்த நாடுகளுக்கு தங்கள் சுதந்திரத்தை பேணி செயற்பட அனுமதித்ததனால் உலக நாடுகள் சீனாவுடன் வர்த்தகம் செய்ய தயங்கவில்லை. இலங்கையும் அதே போன்றுதான்.

அதனால்தான் உலகின் பல கதவுகள் சீனாவுக்கு திறக்கப்பட்டன. சர்வதேச அளவில் சீனாவின் முன்னேற்றத்துக்கு அந்தக் கொள்கை மிகவும் முக்கியமானதாகும்.

அடுத்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சியை சீனா வழிநடத்தும் என்பது தற்போது யதார்த்தமாகிவிட்டது.

உலகை இரண்டு முகாம்களாகப் பிரிப்பது இனி முக்கியமல்ல. இந்த நெருக்கடியிலிருந்து ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை மீட்பதில் சீனா முக்கிய பங்கு வகித்தது. இரண்டு முகாம்களாகப் பிரித்ததன் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டிருந்த உலகிற்கு சீனாவே உதவியது.

பட்டுப் பாதையின் மூலம் ஆசியாவின் பொருளாதார பலத்தை சீனா பெற்றுக் கொடுக்கும் சீனாவின் பட்டுப் பாதை (Silk Road) ஒன்றும் எமக்கு விசித்திரமானதல்ல.

ஏனெனில், பண்டைய காலத்திலேயே, சீனாவை இணைக்கும் பட்டுப் பாதையின் ஒரு புள்ளியிலேயே இலங்கை இருந்தது. திறந்த பொருளாதாரத்தின் உலக யதார்த்தத்தை தமக்கு ஏற்ற வகையில் சீனா ஏற்றுக்கொண்டது.

எனவே, நாட்டில் வர்க்கப் பிளவுகளை ஏற்படுத்தும், நாட்டை பலவீனப்படுத்தும் ஒன்றாக அன்றி – திறந்த பொருளாதாரத்தை சீனா ஏற்றுக்கொண்டது. தனது திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ், தனது நாட்டில் தொண்ணூறு கோடி மக்களின் வறுமையை சீனா ஒழித்துள்ளது.

திறந்த பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவுக்கு இருந்த பொருளாதார பலத்தை, இந்த பட்டுப் பாதையின் மூலம் மீண்டும் ஆசியாவுக்கு சீனா பெற்றுக்கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

2060ஆம் ஆண்டளவில் சீனாவை, கரியமில வாயு சமநிலையை பேணும் Carbon Neutral நாடாக மாற்றுவதற்கு சீனா உறுதியளித்துள்ளது. அதனால் சீனாவின் முதலீடுகளை கொண்டு பயன்பெறும் பட்டுப் பாதையின் நாடுகளும் இதுபோன்ற கொள்கைகளுடன் செயற்படுவது அவசியமாகும்.

Carbon Neutral நாடாக மாற்றுவது மாத்திரமன்றி இந்து சமுத்திரத்தை மாசற்ற இடமாக மாற்றுவது இன்று அதன் இரு புறமுள்ள அனைத்து நாடுகளினதும் பொறுப்பாகும்.

சினோஃபார்ம் தடுப்பூசியை உருவாக்கி உலகுக்கு தாராளமாக நன்கொடை அளித்தமைக்காக சீனாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனை உலகத்துடன் பகிர்ந்து கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி உலகுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றது என்று நான் கூற வேண்டும். சீனா ஆய்வு செய்துள்ள தடுப்பூசியை எங்களைப் போன்ற நாடுகள் தயாரிப்பதற்கு தேவையான அனுமதியையும் அளித்துள்ளது.

இது போன்ற உலகளாவிய தொற்றுநோய் சூழலில், சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் முடிவுகள் அனைத்துமே, மனிதர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகளே ஆகும்” என்றார்

சீனாவுக்கு மிகவும் நெருக்கமாக இலங்கை சென்று கொண்டிருக்கிறது என்ற பரவலான கருத்து எழுந்திருக்கும் நிலையில் ராஜபக்ஷவின் பேச்சு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.