புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை கண்காணிக்க தேவையில்லை: அரசாங்கம்

விடுதலை புலி உறுப்பினர்களாக இருந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

விடுதலை புலி உறுப்பினர்களாக இருந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் ஆரம்பகாலத்தில் புனர்வாழ்வாதார ஆணையாளர் காரியாலயத்தினால் கண்காணிப்புக்கு உட்படுத்தட்டு வந்தனர்.

ஆனால் தற்போது அவர்கள் விசேட கண்காணிப்புக்கு உட்படுத்த தேவைப்பாடு இல்லை என்றும் அவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருவது தொடர்பில் முறைப்பாடு செய்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (14) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், விடுதலை புலி உறுப்பினர்களாக இருந்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட 12 ஆயிரத்து 190 பேர் தற்போது சமூகமயப்படுத்தப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ளதாக தெரிவித்தார்.

அவர்களின் ஆரம்பகட்டத்தின்போது, அவர்களது வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக பல்வேறு கடன் திட்டங்கள் 2010 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோன்று வீட்டு நிவாரணங்கள் சுயதொழில் மேற்கொள்வதற்காக தையல் இயந்திரங்கள் போன்ற பல்வேறு உதவிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தற்போது அவர்கள் சமூகமயப்படுத்தப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்கள் தற்போது சாதாரண மக்களாக இருப்பதால், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கடன் திட்டங்கள் ஊடாக அவர்களுக்கும் சுயதொழில் நடவடிக்கைகளுக்கான உதவிகளை முறையாக பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கு எந்த தடைகளும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதன்போது இடையீட்டு கேள்வி எழுப்பிய சத்தியலிங்கம் குறிப்பிடுகையில், புனர்வாழ்வளிக்கப்பட்ட 12 ஆயிரத்து 190 பேர் அந்த காலப்பகுதியில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்வாங்கப்பட்டதாக வெளியில் வந்து கருத்து தெரிவித்திருந்தார்கள். அது தொடர்பில் எந்த விசாரணையும் நடத்தி தீர்வு காணப்படவில்லை. அதேநேரம் தற்போதும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

அதனால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பாக அரசாங்கம் முறையான விசாரணை மேற்கொள்ளுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றார்களா? என்றும் வினவினார்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவது தொடர்பில் தனக்கு இப்போது எதனையும் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார்.

“ஆனால் அவர்கள் ஆரம்பகாலத்தில் புனர்வாழ்வாதார ஆணையாளர் காரியாலயத்தினால் கண்காணிப்புக்கு உட்படுத்தட்டு வந்தனர்.

தற்போது அவர்களை விசேட கண்காணிப்புக்கு உட்படுத்த தேவைப்பாடு இல்லை. ஏனெனில் அவர்கள் தற்போது நீ்ண்டகாலம் சமூகத்துடன் இணைந்து நல்லமுறையில் வாழ்ந்து வருகிறார்கள்

அத்துடன் அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருவதாக தெரிவித்திருந்தீர்கள். அதுதொடர்பில் முறைப்பாடு செய்தால், அதன் பிரகாரம் செயற்படுவதற்கு எங்களுக்கு முடியும். அவர்களுக்கு தொடர்ந்தும் நிவாரணங்கள் தேவைப்படுவதாக இருந்தால், அதுதொடர்பில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.