கடந்த கால உண்மைகளை கண்டறிந்த பின்னரே அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள முடியும் !

கடந்த கால உண்மைகளைக் கண்டறிந்து, அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவும் முடியும் என்று தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள், அதன் பணிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் மாவட்ட மட்ட சிவில் சமூக அமைப்புகளின் புரிதலை வலுப்படுத்தும் நோக்கிலான பயிற்சி செயலமர்வு யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்க நிறுவனங்களும் சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து, அவர்களது குடும்பங்களுக்கு உண்மையான தகவல்களை வழங்குவதே OMP அலுவலகத்தின் பிரதான நோக்கமாகும்.

கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது கணவர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ளும் எதிர்பார்ப்புடன் பல குடும்பங்கள் பல தசாப்தங்களாகக் காத்திருக்கின்றன.

கடந்த கால உண்மைகளைக் கண்டறிந்து, அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவும் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல், விசாரணைகளை முன்னெடுத்தல் மற்றும் கண்டறியப்படும் உண்மைகளை உரிய தரப்புகளிடம் சமர்ப்பித்தல் ஆகியவையே OMP அலுவலகத்தின் பிரதான பணிகளாகும்.

இழப்பீடுகளை வழங்குவது அதன் நேரடிப் பொறுப்பல்ல. அதற்கென அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்கள் செயற்பட வேண்டியுள்ளன.

அரசாங்கத்தால் தனித்து இப்பணிகளை முன்னெடுக்க முடியாது என்பதால், சிவில் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்பும் அவசியமானது.

OMP அலுவலகம் தனித்து இயங்க முடியாத நிலையில், அரசாங்க நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொடர்புடைய தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.