குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய சட்டம்

ஆங்கில கால்வாயினூடாக பிரித்தானியாவுக்குள் நுளையும் குடியேற்றவாசிகளின் வரவை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவரப்போவதாக பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனாக் கடந்த செவ்வாய்க்கிழமை (13) தெரிவித்துள்ளார்.

சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயினூடாக பிரித்தானியாவுக்குள் நுளையும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அல்பேனியாவை சேர்ந்தவர்களே அதிகளவில் குடிபெயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம், அகதிகளின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்து நிராகரிக்கப்பட்டவர்களை விரைவாக அவர்களின் நாடுகளுக்கு அனுப்புவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது. அல்பேனிய நாட்டவர்களின் 150,000 விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளது. அதனை 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறைவு செய்ய பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

இங்கு சட்டவிரோதமாக வரும் யாரும் தங்க முடியாது, அவர்கள் தமது சொந்த நாட்டுக்கு அல்லது பாதுகாப்பான வேறு ஒரு நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என சுனாக் தெரிவித்துள்ளார்.

சிறு படகுகளில் வரும் குடியேற்றக்காரர்கள் கொன்சவேட்டிவ் கட்சி அரசுக்கு மிகப்பெரும் அரசியல் நெருக்கடிகளை தோற்றுவித்து வருகின்றனர். குடியேற்றவாசிகளுக்கு தங்குமிடம், மருத்துவம், தொழில்வாய்ப்புக்களை வழங்குவதில் பிரித்தானியா கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றது.

குடியேற்றவாசிகளாக குற்றவாளிகள் தமது நாட்டை ஆக்கிரமிப்பதாக பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சர் சுயல்ல பிரவேர்மன் அண்மையில் தெரிவித்த கருத்து அல்பேனியாவின் பிரதமரை கடும் சினம் கொள்ள வைத்திருந்தது.