வெனிசுலாவுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்கவுள்ளது பிரேசில்

125 Views

பிரேசிலில் எதிர்வரும் மாதம் புதிய அரச தலைவர் லூலா ட சில்வா தலைமையில் புதிய அரசு அமையவுள்ள நிலையில் அது அயல் நாடான வெனிசுலாவுடன் இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரேசிலின் இராஜதந்திர குழுவினர் எதிர்வரும் மாதம் வெனிசுலாவின் தலைநகருக்கு பயணம் செய்து தூதரகம் திறப்பதற்காக கட்டிடம் ஒன்றை எடுப்பது தொடர்பிலும், புதிய தூதுவரை நியமிப்பது தொடர்பிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக புதிதாக நியமனம்பெறவுள்ள வெளிவிவகார அமைச்சர் மோரோ வெய்ரா தெரிவித்துள்ளார்.

பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் பொல்சோனரோவின் காலப்பகுதியில் வெனிசுலாவுக்கும், பிரேசிலுக்கும் இடையிலான உறவுகள் பாதிப்படைந்திருந்தன. அவரின் காலப்பகுதியில் வெனிசுலா அதிபர் உட்பட பல அரச அதிகாரிகள் மீது தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.

வெனிசுலாவில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை அமெரிக்கா தலைமையிலான 50 நாடுகள் ஏற்க மறுத்ததுடன், எதிர்கட்சித் தலைவரையே அங்கீகரிக்கப்பட்ட தலைவராக அவை ஏற்றுக்கொண்டிருந்தன. அதில் பிரேசிலும் முன்னர் இணைந்து கொண்டிருந்தது.

தற்போது புதிய பிரேசில் அதிபர் வெனிசுலாவின் தற்போதைய அதிபரை அங்கீகரித்துள்ளதுடன், அங்கு தூதரகம் ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. கொலம்பியாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் வெனிசுலாவின் அதிபரை அங்கீகரித்திருந்தது.

Leave a Reply