சகலரினதும் உரிமைகளை உள்ளடக்கிய புதிய அரசமைப்பு விரைவில் வேண்டும்  –  சம்பந்தன்

337 Views

புதிய அரசமைப்பு விரைவில் வேண்டும்

எந்தவித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கிய வகையில் புதிய அரசமைப்பு விரைவில் வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

‘நான் உறுதியளித்தவாறு, புதிய அரசமைப்பு ஒன்றை வழங்குவதற்கு, அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன்’ என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியையொட்டி அநுராதபுரம், சாலியபுர இராணுவ முகாமில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உரைக்குப் பதில் வழங்கும் வகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து ஆராய ஜனாதிபதி நிபுணர் குழுவொன்றை நியமித்தார். அந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதன் முன்னேற்றகரமான நகர்வுகள் என்ன, இப்போது எந்தக்  கட்டத்தில் இந்த முயற்சிகள் உள்ளன என்று எதுவும் நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரியாது. எமக்கும் இது குறித்த அறிவிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.

எவ்வாறு இருப்பினும் அரசியல் சாசனம் ஒன்று புதிதாக உருவாக்கப்படுகின்ற வேளையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகள் சம்பந்தமாக நிரந்தரமான தீர்வு – அதுவும் பக்குவமான தீர்வு கிடைக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்த நாட்டில் முப்பது வருடங்கள் போர் நடைபெற்றது. நாட்டில் நீண்ட காலமாக அமைதியின்மை காணப்பட்டது. இந்தச் சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்னவென்றால் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் பொருட்படுத்தாமை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஆட்சியாளர்கள் நினைக்காதமையாகும்.

தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொள்கின்ற வகையில் – அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் – தமது ஜனநாயக உரிமைகளுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் செயற்படுகின்றனர்.

தமிழ் பேசும் மக்களின் சகல உரிமைகளும் நாடு முழுவதும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு அமைய வேண்டும் என்றால் தமிழ் மக்களின் உரிமைகளையும் அங்கீகரித்த – அமுல்படுத்தப்பட்ட அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் தான் சாத்தியப்படும். ஆகவே, நாட்டில் முறையான அரசியல் சாசனம் உருவாகினால் மட்டுமே அபிவிருத்தியும், முன்னேற்றமும், அமைதியும் ஏற்படும்.

ஆகவே, எந்தவித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியல் சாசனம் விரைவாக உருவாக்கப்பட வேண்டும் என்பதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டு நிற்கின்றது – என்றார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad சகலரினதும் உரிமைகளை உள்ளடக்கிய புதிய அரசமைப்பு விரைவில் வேண்டும்  –  சம்பந்தன்

Leave a Reply