பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த 751 சிறுவர்கள் புதைக்கப்பட்ட பெயரற்ற புதைகுழிகள்

கனடாவைத் தொடர்ந்து உலுக்கி வருகின்ற வதிவிடப் பாடசாலை விவகாரம்

(பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கனடாவில் பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவர்கள் அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு வதிவிடப் பாடசாலைகளில் சேர்க்கப் பட்டார்கள். இவ்வாறான ஒரு வதிவிடப் பாடசாலை அமைந்திருந்த காம்லூப்ஸ் என்னும் இடத்தில் கடந்த மே மாதத்தின் இறுதியில் 215 பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவர்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்ட ஒரு பொதுப் புதைகுழி றேடார் கருவிகளின் உதவியோடு இனங் காணப்பட்டது. கனடா அரசின் நிதி உதவியோடும் கத்தோலிக்க திருச் சபையின் நிர்வாகத்திலும் மேற் கொள்ளப்பட்ட இவ்வதிவிடப் பாடசாலைகள் தொடர்பான இச்சாவுகள் கனடாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. இந்த அதிர்ச்சியிலிருந்து கனடா மீள்வதற்கு முன்னர் சாஸ்கச்சவான் மாநிலத்தில் 751 பெயர் குறிப்பிடப் படாத புதைகுழிகள் தற்போது அடையாளங் காணப்பட்டிருக்கின்றன. இக்குறிப்பிட்ட விடயம் தொடர்பான மொழியாக்கமாக இக்கட்டுரை அமைகிறது)  

Kamloops 1 பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த 751 சிறுவர்கள் புதைக்கப்பட்ட பெயரற்ற புதைகுழிகள்

கனடாவின் மேற்குப் பகுதியில் பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவருக்காக நடத்தப்பட்ட கத்தோலிக்க வதிவிடப் பாடசாலை வளாகத்துக்கு அண்மையில் 751 பெயர் குறிப்பிடப் படாத புதை குழிகள் அண்மையில் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாக அக்குடிகளின் ஒரு குழுத் தலைவர் தெரிவித்திருக்கிறார். ஒரு மாத காலத்துக்குள் இப்படிப்பட்ட ஒரு செய்தி வெளி வந்தது இது இரண்டாவது தடவையாகும்.

இந்தச் செய்தி கனடாவின் வரலாற்றின் இருண்ட அத்தியாயத்தை மீண்டும் ஒரு தடவை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருப்பது மட்டுமன்றி, இப்பாடசாலைகளில் பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த பிள்ளைகள் சந்தித்த துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் என்பவற்றுக்காகத் திருச் சபையும், திருத்தந்தையும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மீளப் புதுப்பித்திருக்கிறது. கனடாவின் முதன்மைக் கலாச்சாரம் இப்பிள்ளைகளுக்குள் வலுக் கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருந்தது.

“சாஸ்கச்சவான் (Saskatchewan) மாகாணத்தில் மறிவால் வதிவிடப் பாடசாலை  (Marieval Residential School) அமைந்திருந்த இடத்தில் நேற்று வரை 751 பெயர் குறிப்பிடப்படாத புதை குழிகளை நாங்கள் அடையாளங் கண்டிருக்கிறோம்” என்று கவஸ்செஸ் (Cowessess) பூர்வீகக் குடிகளின் தலைவர் கட்மஸ் டிலோம் (Cadmus Delorme) தெரிவித்தார்.

“பலர் ஒன்றாகப் புதைக்கப் பட்ட ஒரு புதைகுழி அல்ல இது. இவை பெயர் குறிப்பிடப் படாத புதை குழிகள்” என்று கூறிய அவர், அந்த இடத்தில் புதைக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்காக புதை குழிகள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்படும்” என்று மேலும் கூறினார்.

“ஒரு காலத்தில் இந்தப் புதை குழிகளில் அடக்கம் செய்யப் பட்டவர்களின் பெயர்கள் குறிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் கத்தோலிக்க திருச் சபையின் பிரதிநிதிகள் அந்தக் கற்களை அகற்றியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவது கனடாவைப் பொறுத்த வரையில் ஒரு குற்றமாகவே கணிக்கப் படுகிறது. எனவே அந்த இடத்தை ஒரு குற்றப் பூமியாகவே நாங்கள் பார்க்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

Marieval பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த 751 சிறுவர்கள் புதைக்கப்பட்ட பெயரற்ற புதைகுழிகள்பிரிட்டிஷ் கொலம்பியாவில் (British Columbia) ஒரு முன்னாள் வதிவிடப் பாடசாலை வளாகத்தில் 215 சிறுவர்களின் உடல் எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சாஸ்கச்சவான் மாகாணத்தின் தலை நகரமான றெஜீனாவிலிருந்து (Regina) 150 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்திருக்கும் மறிவால் பாடசாலை அமைந்திருந்த இடத்தில் அகழாய்வுப் பணிகள் கடந்த மே மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டன.

காம்லூப்ஸ் (Kamloops) பாடசாலையில் புதைக்கப்பட்ட சிறுவர்களின் உடல் எச்சங்கள் முதன் முதலாகக் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கனடாவில் பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த பல நிறுவனங்களுக்கு அருகாமையில் அரச அதிகாரிகளின் உதவியுடன் அகழாய்வுப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த 751 சிறுவர்கள் புதைக்கப்பட்ட பெயரற்ற புதைகுழிகள்

கனடாவின் பூர்வீகக் குடிகளான மெற்றிஸ் (Metis) மற்றும் இனுயிற் (Inuit) குழுக்களைச் சார்ந்த 150,000 பூர்வீக இனச் சிறுவர்கள் 1990கள் வரை, தமது குடும்பங்கள், மொழி, பண்பாடு என்பவற்றிலிருந்து முற்றாகப் பிரித்தெடுக்கப் பட்டு இப்படிப்பட்ட 139 வதிவிடப் பாடசாலைகளில் வலுக் கட்டாயமாக இணைக்கப் பட்டார்கள்.

‘இந்த பூர்வீகச் சமூகங்களுக்கு எதிராகப் பண்பாட்டு ரீதியிலான ஒரு இனவழிப்பை கனடா மேற்கொண்டிருக்கிறது’ என்ற தீர்ப்பை வழங்கிய ஒரு விசாரணைக் குழு, ‘இச்சிறுவர்களில் பலர், உடல் ரீதியிலான தண்டனைகளுக்கும் பாலியல் துஷ்பிரயோகங் களுக்கும் உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள்  என்றும் 4000 சிறுவர்கள் இப்பாடசாலைகளில் இறந்தார்கள்’ என்றும் மேலும் தெரிவித்திருக்கிறது.

இங்கே இழைக்கப்பட்டது மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்று இறைமையுள்ள பூர்வீகத் தேசங்களின் கூட்டமைப்பின் தலைவர் பொபி கமறோன் (Bobby Cameron) தெரிவித்திருக்கிறார்.

“பூர்வீகக் குடிகளாக நாங்கள்  பிறந்தது ஒன்றே சிறுவர்களாக நாங்கள் செய்த ஒரேயொரு தவறு” என்று அவர் கூறினார்.

பூர்வீகக் குடிமக்கள் இந்த நாட்டில் இதுவரை சந்தித்த, மற்றும் தொடர்ந்து இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்டமைக்கப் பட்ட இனவாதம், இனப் பாகுபாடு, அநீதி போன்றவற்றை நாம் வெட்கமடையக் கூடிய வகையில் எமக்கு நினைவூட்டுபவையாக காம்லூப்ஸ் என்ற இடத்திலும் மறிவால் என்ற இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்ட இப் புதைகுழிகள் திகழ்கின்றன என்று கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ (Justin Trudeau) கூறியிருக்கிறார்.

Kamloops 1 1 பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த 751 சிறுவர்கள் புதைக்கப்பட்ட பெயரற்ற புதைகுழிகள்

 “நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த உண்மையை ஏற்றுக் கொண்டு, எமது கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்வது மட்டுமன்றி, ஒப்புரவுப் பாதையிலும் ஒன்றாகவே நாம் இணைந்து பயணிக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

“சாஸ்கச்சவானின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த மறிவால் வதிவிடப் பாடசாலை, 1990களின் நடுப் பகுதி வரை பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவர்களை தன்னகத்தே கொண்டிருந்தது என்றும், அதற்குப் பின்னர் அக்கட்டடங்கள் அழிக்கப்பட்டு நாட் பாடசாலை (Day school) அதே இடத்தில் கட்டப்பட்டது  என்றும், அதே வேளையில் குறிப்பிட்ட அச்செய்தி தனக்கு அதிர்ச்சியைத் தந்தது; ஆனால் ஆச்சரியத்தைத் தரவில்லை” என்றும் அப்பாடசாலையின் முன்னாள் மாணவர்களில் ஒருவரான பறி கெனடி (Barry Kennedy)  சிபிசி (CBC) செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

“மறிவால் வதிவிடப் பாடசாலையில் நான் இருந்த நாட்களில் எனது நண்பனாக இருந்த என்னை விட வயது குறைந்த பிறையன் (Bryan) கத்தக் கத்த இழுத்துச் செல்லப்பட்டான்.” அந்தச் சிறுவனை பின்னர் ஒரு போதுமே தான் பார்க்கவில்லை என்றும் அவன் தற்போது எங்கே இருக்கிறான் என்பதைத் தான் அறிய விரும்புவதாகவும் கெனடி கூறினார்.

அப்பாடசாலையில் வன்முறைகள் அதிகமாகக் கையாளப் பட்டதாக அவர் விபரித்தார். “பாலியல் வன்புணர்வுக்கு நாங்கள் அறிமுகப்படுத்தப் பட்டோம். கடுமையான உடல் ரீதியான தண்டனைகளுக்கு நாங்கள் உள்ளானோம். எங்கள் குடும்பங்களில் நாங்கள் காணாத பல விடயங்கள் எங்களுக்கு அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டன.”

“இது வரை கண்டு பிடிக்கப்பட்ட புதை குழிகள் பனிப் பாறையின் ஒரு நுனிப் பகுதி மட்டுமே” என்றார் அவர். “எங்கள் நண்பர்களும் எமக்கு அறிமுகமானவர்களும் கூறிய கதைகளைப் பார்க்கும் போது ஒவ்வொரு பாடசாலைக்கும் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.”

Delorme பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த 751 சிறுவர்கள் புதைக்கப்பட்ட பெயரற்ற புதைகுழிகள்

எதிர் வரும் மாதங்களில் இப்படிப்பட்ட குரூரமான இன்னும் பல கண்டு பிடிப்புகள்  மேற் கொள்ளப்படலாம் என்று பூர்வீகச் சமூகங்களில் தலைவர்கள் பலர் எதிர் பார்க்கிறார்கள். இதுவரை மேற் கொள்ளப்பட்ட தேடுதல்களின் விளைவாக ஒன்ராறியோ (Ontario) மற்றும் மனிற்றோபா (Manitoba) மாகாணங்களில்  இப்படிப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத பல புதை குழிகள் காணப்படலாம் என நம்பப்படுகிறது.

இன்னும் அதிகமான உடல்களை நாங்கள் கண்டு பிடிப்போம். எமது பிள்ளைகள் எல்லோரதும் உடல்களைக் கண்டு பிடிக்கும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை என்று ஊடகவியலாளருக்கான சந்திப்பில் கெனடி குறிப்பிட்டார்.

பூர்வீகக் குடிகளுக்கு இந்த நாடு இழைத்த அநீதிகளின் உண்மையை எதிர் கொள்ள எமக்குத் தடையாக இருக்கின்ற எமது அறியாமையையும், இனவாதம் தற்செயலானது என்ற புரிதலையும் நாம் தூக்கியெறிய வேண்டும் என்று கூறிய தலைவர் டிலோம் இந்த நேரத்தில் இந்த நாடு எமக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காம்லூப்சில் சிறுவர்களின் எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர் இக்கண்டு பிடிப்புகள் தொடர்பாக உடனடியாகவும், முழுமையாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் படி ஒட்டாவாவையும் (Ottawa) வத்திக்கானையும் (Vatican) மனித உரிமை நிபுணர்கள் கேட்டிருக்கிறார்கள்.

நன்றி: தென்சீன காலைப்பதிவு; South China Morning Post