நாமல் தொடர்ந்தும் விளக்கமறியலில்… : யோஷிதவின் வழக்கு ஒத்திவைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.

எயார்பஸ் (Airbus) வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றத்தில் விசேட காரணங்கள் முன்வைக்கப்படாததைத் தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உடனடியாகக் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்து, அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் சகோதரரான யோஷிதா ராஜபக்ஷவை நிர்வாகப் பயிலுநராக இணைத்துக் கொண்டு, அரச செலவில் பிரித்தானியாவில் உள்ள அரச கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற ஏற்பாடு செய்ததன் மூலம் ஊழல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை, எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், தாங்கள் கோரிய ஆவணங்களில் ஒரு பகுதி மாத்திரமே கிடைத்துள்ளதாகவும், ஏனைய ஆவணங்கள் அரச தரப்பினால் வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பிரதிவாதிகள் கோரிய ஆவணங்கள் ஏதேனும் எஞ்சியிருந்தால் அவற்றை வழங்குமாறு கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை மேலதிக விசாரணை முன்னேற்பாட்டுக் கலந்துரையாடலுக்காக எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.

2006ஆம் ஆண்டு, தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் நிர்வாகப் பயிலுநராக இணைத்ததுடன், நடைமுறையில் இருந்த விதிமுறைகளுக்கு மாறாக அரச செலவில் பிரித்தானியாவில் உள்ள அரச கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற ஏற்பாடு செய்ததன் மூலம் ஊழல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, குறித்த இருவருக்கும் எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.