ஷிரந்தி ராஜபக்ஷவுக்கான இருதய அறுவை சிகிச்சை குறித்து நீதிமன்றம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான்ன் நேற்று (13) உத்தரவிட்டுள்ளார்.

‘சிரிலிய சவிய’ நிதியத்துடன் தொடர்புடைய வங்கிக் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் குற்றவியல் ரீதியான நம்பிக்கை மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் முன்வைத்த சமர்ப்பணங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான ஷிரந்தி ராஜபக்ஷ இன்று திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

ஷிரந்தி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்து, மருத்துவ அறிக்கையொன்றையும் அவரது சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதனிடையே, இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ், ‘சிரிலிய சவிய’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட நிதி நடவடிக்கைகள் தொடர்பில் பணமோசடி மற்றும் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவரது சட்டத்தரணி, அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்குமாறு கோரியுள்ளார்.

எனினும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும்,இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகத் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அரச தரப்பு தெரிவித்தது.

இரு தரப்பினரதும் சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்ட பிரதம நீதவான், ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு உண்மையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

இதன்படி, வழக்கு இன்று பிற்பகல் 2.20 அளவில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.