“என்ரை பிள்ளை வந்துவிடுவான் தானே தம்பி”

மகனின் வரவுக்காய் ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்– பாலநாதன் சதீஸ்

Missing “என்ரை பிள்ளை வந்துவிடுவான் தானே தம்பி”

 

 

தமிழராகப் பிறந்த நமக்கு இழப்புகள் புதிதல்ல. ஆனால் ஒவ்வொரு இழப்பிற்கும் ஒவ்வொரு வலி. சொத்தை இழந்தால் மீண்டும் சம்பாதித்து விடலாம். பிள்ளைகளை இழந்தால் சம்பாதிக்கவும் முடியாது, மீட்டு விடவும் முடியாது. இழந்தவர்களுக்குத் தான் இழப்பின் வலி என்ன வென்று புரியும். பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையைத் தனியாக விசாரணைக்காக, தெரியாத இடத்தில், தெரியாத வேற்றினத்தவரிடம் ஒப்படைத்து விட்டு, என் மகன் இன்று வருவான், நாளை வருவான் என்று வலியோடு காத்திருக்கும் நிலையை எப்படிச் சொல்வது.

IMG 20210702 084929 “என்ரை பிள்ளை வந்துவிடுவான் தானே தம்பி”கடந்த 2009ஆம் ஆண்டு இனவழிப்புப் போரின் உச்சத்திலும், அதற்கு முன்னதாக போர்க் காலங்களிலும் தமிழ் மக்கள் அனுபவித்த வலிகளும், வேதனைகளும், இழப்புகளும் இதுவரை ஈடு செய்யப் படவில்லை. பாதிக்கப்பட்ட வர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை.

தம் உறவுகளைத் தொலைத்து விட்டும், இராணுவத்தினரிடம் கையளித்து விட்டும் அவர்களின் வருகைக்காக இன்று எத்தனையோ பெற்றோர்கள், உறவினர்கள் வீதிகளிலே போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித் தன் மகனை விசாரணைக்காக இராணுவத்தினரிடம் ஒப்படைத்து விட்டுத் தன் பிள்ளையின் வருகைக்காகப் பன்னிரண்டு வருடங்கள் காத்திருக்கும் ஓர் தாயின்  வலி இது.

“நான் சங்கரப்பிள்ளை வானலோஜினி. நாங்கள் வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தில் வசித்து வருகிறோம். எனது மகன் ரதன் அவரை 2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் விசாரணைக்காக ஒப்படைத்தோம். ஆனால் என் மகன் எங்கே என்பது இதுவரை தெரியவில்லை.

IMG 20210630 183706 “என்ரை பிள்ளை வந்துவிடுவான் தானே தம்பி”2009ஆம் ஆண்டு மாசி மாதம் 12ஆம் திகதி, நாங்கள் எல்லோரும் வன்னியில் இருந்து வவுனியாவுக்கு வந்தனாங்கள். வரும் போது ஓமந்தையில் வைச்சு இராணுவத்தினர் எங்களை மறிச்சு விசாரணை செய்தார்கள். பிறகு எங்கள் எல்லாரையும் போகச் சொல்லி கூறினார்கள். நாங்கள் போகும் போது, திரும்பக் கூப்பிட்டு மகனை மட்டும் விட்டுவிட்டு நீங்கள் போங்கோ, பிள்ளையை அடுத்த பஸ்ஸில் ஏத்தி அனுப்புறம் எண்டு கூறினார்கள். அப்போ நான் போக மாட்டன் என்று அழ, இல்லை நீங்கள் போங்கள். அடுத்த பஸ்ஸில் ஏத்தி விடுவம் என்று சொல்லி என்னை பஸ்ஸில் தள்ளி கட்டாயப் படுத்தி ஏத்தினார்கள். ஆனா இது வரைக்கும் என்ரை பிள்ளையை விடவில்லை.

அதுக்குப் பிறகு 2009ஆண்டு 7ஆம் மாதம் 14ஆம் திகதி செட்டிகுளம் பாடசாலையில் வந்து சங்கரப்பிள்ளை ரதனின்  உறவினர் யார் இருக்கினம் என்று விசாரித் திருக்கிறார்கள். ஆனால் அந்த இடத்தில் நான் இல்லை. என்னுடைய அண்ணா தான் இருந்தவர். உடனே அண்ணா போய் என்ரை தங்கச்சியின் பிள்ளை தான் என்று சொல்ல, சரி உங்கடை பிள்ளையைக் கொண்டு வந்து விடுவம் என்று சொல்லிவிட்டு போனார்கள். நாங்கள் காத்திருந்தோம். ஆனால் அதற்கும் எந்த முடிவும் இல்லை.

அதற்கு பிறகு எல்லா இடமும் போய் என்ரை பிள்ளைய ஓமந்தையில் விசாரணைக்கு மறித்தவர்கள். ஆனால் இதுவரை விடுவிக்கவில்லை என முறைப்பாடு செய்து, மனித உரிமை ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்தனான். எல்லா இடமும் பிள்ளையின் படத்தையும், அத்தாட்சிப் பத்திரத்தையும் கொண்டுதான் நான் போவேன். ஆனால் எதற்கும் எந்தவித பதிலும் இதுவரை இல்லை.

2014ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 24ஆம் திகதி அநுராதபுரத்தில் இருந்து வாறம் என்று இரண்டு புலனாய்வுத் துறையினர் எங்கட வீட்டிற்கு வந்தவை. அவர்கள் என்ரை பிள்ளை கொடுத்த விபரத் துண்டோடு வந்தவை. வந்து பிள்ளை படித்த இடம், வளர்ந்த இடம், சகோதரர்கள் என எல்லா விபரங்களையும் கேட்டு விசாரிச்சிட்டு, அவரின் விசாரணை எல்லாம் முடிஞ்சிது. உங்கடை மகனை நாங்கள் விடுவம், பெரிய தளபதிமாரை எல்லாம் விடுதலை செய்திட்டம். நாட்டில் நடந்த பிரச்சினை முடிஞ்சுது. இன்னும் ஒரு மாதத்தால் உங்கடை பிள்ளையை விடுவம் என்று ஒரு நம்பிக்கை வார்த்தையைக் கூறினார்கள்.

IMG 20210630 185709 “என்ரை பிள்ளை வந்துவிடுவான் தானே தம்பி”அப்போது பிள்ளையை ஒருக்கால் பார்க்க வேணும் எண்டு நான் சொன்னன். ஐந்து வருசமா பிள்ளையைப் பார்க்காம இருந்திட்டீங்கள். இந்த ஒரு மாதத்திற்குப் பொறுமையாக இருக்க மாட்டீங்களா? உங்கடை மகனை விடுதலை செய்வோம் என சொல்லிப் போனவர்கள் தான், ஆனால் என்ரை பிள்ளை என்னிடம் வரவே இல்லை.

என்ரை பிள்ளையை ஓமந்தையில் விசாரணைக்காக இராணுவத்திடம் விட்டிட்டு போகும் போது அவனுக்கு 17 வயது. எதுவுமே அறியாத வயது. என்ரை பிள்ளை இப்போ எங்கயோ இருக்கிறான். ஆனா எங்கே எண்டு தெரிய வில்லை. என்ரை மகன் பாடசாலையில் படிக்கும் போது நல்ல கெட்டிக்காரன். பாடசாலையில் நடக்கிற எல்லாப் போட்டிகளிலும் சரி, விளையாட்டிலும் சரி பங்கு பற்றுவான். ஆனால் இப்போ என்ரை பிள்ளையின் படிப்பும் போய், பிள்ளையையும்  காணாமல்  ஆக்கிப் போட்டார்கள். என்ரை பிள்ளை என்னிடம் வருவான் என்று தான் இப்பவரை காத்துக் கொண்டிருக்கிறன்.

என்ரை மகன் எங்கை இருந்தாலும் இந்த அம்மாவைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் தான் நான் காணாமல் போன உறவுகளைத் தேடும் போராட்டங்கள் எங்கே நடந்தாலும் போறனான்.

இதுவரையும் என்ரை பிள்ளைய மீட்கதான் போராடிக் கொண்டு இருக்கிறன். எனக்கு என்ரை பிள்ளை வேணும். எப்பிடியாவது மீட்டுத் தாருங்கள்.” என தன் துயரக் கதையை கூறி முடித்தார் அந்தத் தாய்.

விசாரணை எனும் பெயரில் பிள்ளையை இராணுவத்தினரிடம் கையளித்து விட்டு ஏக்கம் கலந்த தவிப்புடன், பிள்ளையின் வரவுக்காய் காத்திருக்கும் அந்தத்  தாயைப் போல பல பெற்றோர், உறவினர்கள் இலங்கை அரச புலனாய்வாளர் களினாலும், இராணுவத்தினராலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

தாய் பெயர் : சங்கரப்பிள்ளை வானலோஜினி

மகன் பெயர்: சங்கரப்பிள்ளை  ரதன் (கைது  : 2009.02.12)

இடம் – வவுனியா சாஸ்திரி கூழாங்குளம்.

 

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 “என்ரை பிள்ளை வந்துவிடுவான் தானே தம்பி”