உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் – கைதான 200இற்கு மேற்பட்டவர்கள் எந்தவித குற்றசாட்டுமின்றி சிறையில் இருக்கிறார்கள்: சுமந்திரன்

குற்றச்சாட்டுமின்றி சிறை

200 மேற்பட்ட முஸ்லிம்கள் எந்தவித குற்றச்சாட்டுமின்றி சிறையில்

“உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் 300 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, இன்னமும் 200 இற்கு மேற்பட்டவர்கள் எந்தவித குற்றச்சாட்டுமின்றி சிறையில் இருக்கிறார்கள். தற்போது முஸ்லீம்களுக்கும் இந்த வலி தெரியும். அதனால் அவர்களும் திரண்டு வந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவு வழங்குகிறார்கள்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் கையெழுத்துப் போராட்டம் வவுனியாவில்  இடம்பெற்று வரும் நிலையில், அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்த்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் வவுனியா மாவட்டத்திலும் ஆரம்பமாகிறது. மக்கள் மிகுந்த ஆர்வமாக இந்த கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தங்களுக்கும் இதில் பங்கு இருக்கின்றது என்ற பொறுப்புணர்வுடன், பல இடங்களில் ஏன் தமது இடங்களுக்கு வரவில்லை என அழைத்து கேட்கிறார்கள். இது ஒரு மக்கள் போராட்டமாக இருக்கிறது. தமிழ் பகுதிகளில் இந்தப் போராட்த்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் தமிழ் இளைஞர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள். 1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இது சிங்கள இளைஞர்களையும் மோசமாக பாதித்து இருக்கிறது. ஜேவிபி தலைவர் இதில் கையொப்பம் இட்டார். கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்த போது ஜேவிபியினர் அணியினராக வந்து இதில் கையொப்பம் இட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் கொடுமை தெரியும்.

இன்றைக்கு 2 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் 300 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு இன்னமும் 200 இற்கு மேற்பட்டவர்கள் எந்தவித குற்றச்சாட்டுமின்றி சிறையில் இருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கும் இந்த வலி தெரியும். அதனால் அவர்களும் திரண்டு வந்து ஆதரவு வழங்குகிறார்கள். குறிப்பாக முஸ்லிம் பெண்களின் ஆதரவு அதிகமாகவுள்ளது.

சிங்கள பகுதிகளிலும் இதற்கு ஆதரவு கிடைக்கிறது. நீர்கொழும்பில் இதற்கான ஆதரவு கிடைத்தது. தெற்கில் இருக்கும் பல மாவட்டங்களில் அங்குள்ள அரசியல் தலைவர்கள் இதில் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். சிறிலங்கா சமசமாஜக் கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தானாகவே அறிக்கை விடுத்துள்ளார்.

ஆகவே, நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டமாக அனைத்து தரப்பினரும், அனைத்து கட்சிகளும் சேர்ந்து கோருகின்ற ஒரு போராட்டமாக இது மாறியிருக்கின்றது. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் வரை எமது போராட்டம் தொடரும். கையெழுத்துப் போராட்டம் அதில் ஒரு அங்கம்” என்றார்.

Tamil News