வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை தொடர்ந்தும் இளைய சமூகத்தினருக்கு கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில்கடந்த 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் என பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் காலை 8:30 மணியளவில் திருகோணமலை சிவன்கோவிலடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்ற யாழ் பல்கலைக் கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கான அரிசி மற்றும் விறகினை பொதுமக்களிடமிருந்து பெற்று திருகோணமலை சிவன்கோவிலடி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப்பெற்றது.
தொடர்ச்சியாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து பொதுமக்களிற்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.