சுயலாப அரசியலுக்காக எமது வலியை அரசிடம் அடகுவைக்காதீர்கள் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள்

உள்ளகப்பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்து, சர்வதேச நீதி ஒன்றே எமக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என்ற தெளிவான முடிவுடன் போராடும் எமது வலியை மீண்டும் உங்களின் சுயலாப அரசியலுக்காக இலங்கை அரசிடம் அடகுவைக்காதீர்கள். 

உங்கள் நலனுக்காக சிங்கள அரசிடம் எமது கண்ணீருக்கு விலை பேசாதீர்கள் என்று அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழ் அரசியல்வாதிகளிடம் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதிக்கும் வட, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், இதுகுறித்து வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

2009 ஆம் ஆண்டில் யுத்தம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து சரணடைந்த, கையளிக்கப்பட்ட மற்றும் அழைத்துச்செல்லப்பட்ட உறவுகளும், வெள்ளை வான்கள் மற்றும் ஆயுத முனைகளில் கடத்தப்பட்ட உறவுகளும் சிங்கள அரசாலும் அதன் இராணுவ துணைக்குழுக்களாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டனர். நாம் அவர்களைத்தேடி 14 வருடங்களாகப் போராடிவருகின்றோம். அதில் 8 வருடங்கள் நாம் எமது அரசியல்வாதிகளை நம்பியிருந்தோம். அப்போது சில தமிழ்த்தரப்பினரின் ஆதரவுபெற்ற, அவர்களால் ‘நல்லாட்சி’ என்று புகழப்பட்ட அரசு இருந்தது. இருப்பினும் அப்போதுகூட எமது அரசியல்வாதிகளால் எம்முடைய உறவுகளை மீட்டுத்தரவும், எமக்கு நீதியைப் பெற்றுத்தரவும் முடியாமல்போய்விட்டது. அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற மூன்று சந்திப்புக்களிலும் அவர் எமக்களித்த வாக்குறுதியை மீறியதால், இலங்கை அரசாங்கத்திடம் நீதியைப் பெறமுடியாது என்றும், எனவே சர்வதேசத்திடம் நீதியைக்கோருவதாக அறிவித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி எமது தொடர் போராட்டத்தை ஆரம்பித்தோம்.

இலங்கை அரசு இணையனுசரணை வழங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எவ்வித முன்னேற்றத்தையும் எட்டாதபோதிலும், இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குமாறு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் சர்வதேச நாடுகளில் பிரசாரம் செய்தனர். கால அவகாசம் வழங்குவதற்கு ஆதரவளிக்கவேண்டாம் என்ற எமது கோரிக்கையையும் மீறி, அதற்கு ஆதரவாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்த அரசியல்வாதிகள் எமது துயரத்தையும் வலியையும் இழப்பயும் பொருட்படுத்தவே இல்லை.

இப்போது மீண்டும் சர்வதேசத்துக்குக் காண்பிப்பதற்காக இலங்கை அரசினால் அரங்கேற்றப்படும் பேச்சுவார்த்தை எனும் நாடகத்தில் பங்கேற்கும் அரசியல்வாதிகள் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாகவும் பேசவிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டோம். உள்ளகப்பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்து, சர்வதேச நீதி ஒன்றே எமக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என்ற தெளிவான முடிவுடன் போராடும் எமது வலியை மீண்டும் உங்களின் சுயலாப அரசியலுக்காக இலங்கை அரசிடம் அடகுவைக்காதீர்கள். உங்கள் நலனுக்காக சிங்கள அரசிடம் எமது கண்ணீருக்கு விலை பேசாதீர்கள்.

நீங்கள் உண்மையிலேயே இதய சுத்தியுடனும் தமிழ்மக்களின் நலன்கருதியுமே அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வதாக இருந்தால், எமது உறவுகள் காணாமலாக்கப்படுவதற்குக் காரணமான சிங்கள இராணுவத்தை எமது தாயகமான வட, கிழக்கு மாகாணங்களிலிருந்து வெறியேறுவதற்கு அரசை இணங்கச்செய்யுங்கள். அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணையில் இலங்கை அரசின் தலையீடோ அல்லது அச்சுறுத்தல்களோ இருக்காது என்ற எழுத்துமூல உறுதிப்பாட்டினைப் பெறுவதுடன், வட – கிழக்கில் நிகழும் திட்டமிட்ட சிங்கள பௌத்தமயமாக்கலை நிறுத்துவதற்கும் எழுத்துமூல உறுதிப்பாட்டினைப் பெறுங்கள்.

மேலும், தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும் சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு, கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை தமிழ்மக்களுக்கு வழங்கப்படவேண்டும். இதில் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்படவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.