ஆப்கனிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியின் கீழ் பல்வேறு சட்ட நடவடிக்கைகளால் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டில் உள்ள ஐ.நா உதவிக்குழு தெரிவித்துள்ளது.
ஆப்கனிஸ்தானில் கடந்த 2021-ல் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றனர். தலிபான்களின் ஆட்சியில் பத்திரிகையாளர்களின் நிலை தொடர்பாக அந்நாட்டில் உள்ள ஐ.நா உதவிக் குழு (UNAMA) மற்றும் மனித உரிமைகள் அலுவலகம் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அந்த ஆவணத்தில், 2021ல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்கள் உரிமை மீறல்களுக்கு உள்ளாகி உள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு எதிரான டஜன் கணக்கான சித்ரவதை மற்றும் தன்னிச்சையான கைது வழக்குகள் இதனை வெளிப்படுத்துகின்றன.
ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன் அந்நாட்டில் 1,700 பெண் பத்திரிகையாளர்கள் உட்பட 8,400 பத்திரிகையாளர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 560 பெண்கள் உட்பட 5,100 பேர் மட்டுமே பத்திரிகைத் தொழிலில் உள்ளனர். “பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் மதிக்கப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.
பத்திரிகை சுதந்திரத்தில் 180 நாடுகளின் தரவரிசையில் 2021 ஆம் ஆண்டு 122வது இடத்திலிருந்த ஆப்கனிஸ்தான் தற்போது 178-வது இடத்துக்கு சரிந்துள்ளது.