மாதகல் மீனவர் மரணம் விபத்தல்ல கொலை-தமிழ் தேசிய மக்கள் முன்னணி

மாதகல் மீனவர் மரணம்

மாதகல் மீனவர் மரணம்: மாதகல் கடல் பரப்பில் இடம்பெற்ற கொலை சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் கடற்படையினரின் படகு மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் கடந்த இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

படகு ஒன்றில் தனியாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாதகல் குசுமந்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரின் கண்காணிப்பு படகே குறித்த மீனவரின் படகு மீது மோதியதாகவும் மீனவர் பயன்படுத்திய படகு முற்றாக சேதம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட மீனவர் இந்தப் பகுதியில் மக்களின் காணிகளை கடல் படை சுவீரிகரிக்கும் செயற்பாட்டுக்கு முன் நின்று எதிர்ப்பு தெரிவித்தவர். அதன் பின்னர் குறித்த காணி விடயம் தொடர்பில் மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்திலும் தனது பங்கை அவர் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அவரை மட்டும் குறி வைத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதா என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே இது விபத்தில்லை என்று தெளிவாக தெரிகிறது.

கடற் படையே இந்த காட்டு மிராண்டி தனமான வேலையை செய்திருப்பார்கள் என மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களை கொலை செய்யும் நடவடிக்கைகளை இவர்கள் இன்னமும் விடவில்லை. இதற்கு முன்னரும் நிலத்துக்காக போராடிய நபர் ஒருவரை கஞ்சா வைத்திருந்தார் என குற்றம் சுமத்தி கடற் படை அவரை கைது செய்தது.

போர் நிறைவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்ற போதும் தமிழ் மக்கள் கொலை செய்யப்படுகின்றனர். இங்கே நீதி கிடைக்கும் என்று எமக்கு நம்பிக்கையில்லை. இந்திய மீனவர்களை பாதுகாத்து இலங்கை மீன்வர்களை கொல்லும் செயற்பாட்டில் தான் கடற் படை ஈடுபடுகிறது. இங்கே வந்து விசாரணை செய்பவர்களும் மழுப்பிக் கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

Tamil News