காணாமல் ஆகாகப்பட்டோர் விவகாரம்: மரணச் சான்றிதழை பெற்றால் ஒரு இலட்சம்

மரணச் சான்றிதழை பெற்றால் ஒரு இலட்சம்

மரணச் சான்றிதழை பெற்றால் ஒரு இலட்சம்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்வோருக்கு ஒரு இலட்சம் ரூபா பணத்தை உதவித் தொகையாக ஒரு தடவை மட்டும் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவருகையில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குடும்பங்களின் வாழ்வினை மீள கட்டியெழுப்புவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கான யோசனையை நீதியமைச்சர் அலிசப்ரி அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.

எதிர்கால சந்ததியினரின் நலன்களை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் தற்போது வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கமைய அந்த குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு 17ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம், காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த அலுவலகத்தால் கண்டறிப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின், குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியை, ஒருமுறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

ஆனால், சிறிலங்கா அரச படைகள் தமக்கு வழங்கிய உறுதிமொழியையடுத்து  தம்மால் கையளிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு மரணச்சான்றுதழை பெற்றுக்கொள்ள தாம் தயாராக இல்லையென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்கனவே பல போராட்டங்களின் போது தெரிவித்துள்ளனர். அத்தோடு தமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும்  படையினரிடம் கையளிக்கப்பட்ட தம் உறவுகளை மீட்டுத் தர வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil News