இந்தியாவுடன் உறவுகளை புதுப்பிக்கும் திட்டத்துடன் புதுடில்லி செல்லும் மிலிந்த மொரகொட

235 Views

milinda 0 இந்தியாவுடன் உறவுகளை புதுப்பிக்கும் திட்டத்துடன் புதுடில்லி செல்லும் மிலிந்த மொரகொடஇந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட, அந்த நாட்டுடனான உறவுகளைப் புதுப்பிப்பதற்கான திட்டம் ஒன்றுடன் விரைவில் புதுடில்லிக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை, இந்தியாவுடனான இலங்கையின் வர்த்தகம், முதலீட்டுக்கான வாய்ப்புக்கள், மத ரீதியான பரிமாற்றத் திட்டங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்ட திட்டம் ஒன்றுடன் மிலிந்த மொரகொட விரைவில் புதுடில்லி செல்லவிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுடனான உறவுகளைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்ட ஆவணத்தை மிலிந்த மொரகொட தலைமையிலான விஷேட குழு ஒன்று தயாரித்திருக்கின்றது. இந்தியாவுக்கான இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகர் நிலுக்கா கடுறுகமுவ, புதுடில்லி, சென்னை, மும்பாய் ஆகிய நகரங்களிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலய இராஜதந்திரிகளைக் கொண்ட குழுவே இந்த திட்ட ஆவணததைத் தயாரித்திருக்கின்றது.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொடையை நியமிப்பதற்கு உயர் பதவிகள் குறிதத பாராளுமன்றக் குழு கடந்த செப்டம்பரிரேயே அனுமதியை வழங்கியிருந்தது. அதேவேளையில் அமைச்சரவை அந்தஸ்துடனான உயர் ஸ்தானிகராக மிலிந்தவை நியமிப்பதை இந்தியா நிராகரித்திருப்பதாக வெளியான செய்திகளை இந்தியா மறுத்திருந்தது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் திட்டத்தை இலங்கை ரத்துச் செய்ததையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் கசப்பான நிலை ஒன்று தோன்றியிருந்தது. அதனைவிட, சீனாவின் அதிகரித்த பிரசன்னமும் இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பின்னணியிலேயே உறவுகளைப் புதுப்பிப்பதற்கான புதிய திட்டத்துடன், மிலிந்த மொரகொட புதுடில்லி செல்லவிருக்கின்றார்.

சீனாவுடனான நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள “பாத் பைஃன்டர்” என்ற அமைப்பின் நிறுவனராக மிலிந்த மொரகொட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply