சிறீலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் விமர்சனம்

318 Views

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் 44 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்கா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

முஸ்லீம்கள் உட்பட பல வேற்று இன மக்கள் மீது கொரோனா வைரஸ் நோய் காலத்தில் சிறீலங்கா அரசு கடுமையாக நடந்துகொண்டுள்ளது. சிறுபான்மை மக்கள் மீது கடுமையான விதிகளை கடைப்பிடித்த சிறீலங்கா அரசு பெரும்பான்மை மக்கள் மீது அதனை பிரயோகிக்கவில்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மிச்சேல் பசலெட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளை நாம் ஈராக், ஹெயிட்டி, பல்கேரியா மற்றும் பாகிஸ்தானிலும் அவதானித்துள்ளோம். அங்கும் சிறுபான்மையின மக்கள் கடுமையாக நடத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்கா அரசு ஐ.நா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தவறியுள்ளதாக ஜேர்மனி, வட மசடோனியா, மொன்ரோநீக்ரோ, கனடா மற்றும் பிரித்தானியாவை ஆகிய நாடுகளை இணைத்தலைமையாக கொண்ட குழு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நாடுகளின் சார்பில் பேசிய பிரித்தானியாவின் பிரதிநிதி றீட்டா சிறீலங்கா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

தற்போதைய இந்த நிலையானது சிறீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உறுதிப்படுத்தப்பட்டால் சிறீலங்கா அரசு மீது பொருளாதாரத் தடைகளும் கொண்டுவரப்படலாம் என கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இருந்தபோதும், தாம் அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்புக்களுடனும், அவர்களின் தொழில்நுட்ப உதவிகளுடனும் உள்ளக விசாரணை ஒன்றை மே;றகொள்ள சம்மதிப்பதாகவும், இது தொடர்பில் ஐ.நாவுடன் தாம் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொள்வோம் எனவும் சிறீலங்கா அரசு நேற்று (4) தெரிவித்துள்ளது

Leave a Reply