ஈழ மண் இழந்த மாபெரும் புரட்சியாளன் மாவீரன் திலீபன்- பார்த்திபன் பசிதீர வெடிக்கட்டும் மக்கள் புரட்சி-ICET

435 Views

WhatsApp Image 2021 09 20 at 8.33.17 AM ஈழ மண் இழந்த மாபெரும் புரட்சியாளன் மாவீரன் திலீபன்- பார்த்திபன் பசிதீர வெடிக்கட்டும் மக்கள் புரட்சி-ICET

“ஈழமண் இழந்த மாபெரும் புரட்சியாளன் மாவீரன் திலீபன். பார்த்திபன் பசிதீர வெடிக்கட்டும் மக்கள் புரட்சி”  என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது, நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப்
புரட்சிக்குத் தயார்ப்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன, நான் திருப்தி
அடைகிறேன்” இது தியாக தீபம் திலீபன் வீர மரணம் அடைவதற்கு முன் ஆற்றிய இறுதி உரை.

15.09.87 காலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கோவில் முன்றலில் ஐந்தம்சக்
கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்தார், தமிழ்மக்கள் பெருந்திரளாக ஒன்றுகூடி ஓவென்று அழுது புலம்பிக் கொணருந்தனர்.

ஈழமண் திலீபனை இழக்கப் போகிறதென்று எல்லோரும் நெஞ்சில் கனதியுடன் பார்த்தீபன் பசிபோக்க யாராவது வருவார்களா என்று அங்கலாயித்துக் கொண்டு இருந்தனர். புத்தனைப் பெற்ற, காந்தியை ஈன்ற இந்திய தேசமே வஞ்சனை செய்யாதே என மக்கள் இரவுபகலாக திலீபனின் மரணப்பந்தலைச் சுற்றி அழுதுகொண்டே இருந்தார்கள்.

சிங்கள ஆட்சியாளர்களிடம் அடிமைப்பட்டிருந்த தன் தாய் நிலத்தை, தன் இன மக்களை மீட்கும் போராட்டத்தில் சின்னஞ் சிறுவயதிலேயே, தன்னை இணைத்துக்கொண்ட திலீபன் பலசமர்க் களங்களைச் சந்தித்த வீரமறவன். தர்மத்தைப் போதித்த இந்திய தேசத்திடம் நியாயம் கிடைக்கும் என்றே ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து நீதிகிடைக்காமல் பசியுடனே தனது இன்னுயிரை நீர்த்தான் வீரமறவன் பார்த்தீபன்.

DKmIpSvU8AA5GY2 ஈழ மண் இழந்த மாபெரும் புரட்சியாளன் மாவீரன் திலீபன்- பார்த்திபன் பசிதீர வெடிக்கட்டும் மக்கள் புரட்சி-ICET

ஐந்தம்சக் கோரிக்கை:

1. தமிழ் மண்ணிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற வேண்டும்.

2. அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

3. தமிழ் பிரதேசத்தில் சிங்கள காவல் நிலையம் திறக்கப்படுவது நிறுத்தவேண்டும்.

4. தமிழ் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்தப்பட வேண்டும்

5. வட – கிழக்கில் இடைகால ஆட்சி உடனே நிறுவ வேண்டும்.

திலீபனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் பார்த்திபன். தேசிய விடுதலை இயக்கம் அளித்த பெயர் திலீபன். கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிறைந்த தமிழீழத் தேசிய விடுதலை இயக்கத்தின், பிராந்திய அரசியல்துறை பொறுப்பாளராக இயங்கியவர். உண்ணா நோன்பு என்றாலே நகைப்புக்குரிய ஒன்றாக மாறிவிட்ட இக்காலச் சூழலில், கொண்ட கொள்கைக்காக சொட்டு நீர் அருந்தாமல் உயிர் துறந்து, காந்தி தேசம் என்று அழைக்கப்படும் இந்தியா உட்பட உலகத்தின் செவிப்பறைகளில் உண்ணா நோன்பின் மகத்துவத்தை ஓங்கி ஒலித்தவன் அறப்போராளி திலீபன். பிறந்த மூன்றே மாதத்தில் தன் தாய்மடி இழந்தவன், 23 வயதில் தன் தாயகத்தின் மடியில் உயிர் துறந்தான்.

தியாக தீபம் திலீபனின் இறுதித்தருணத்தில் ஈழத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரை
எழுதிய வரிகள் இன்றும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கின்றது.

இந்திய அரசே!
இது உனக்குப் புரிகிறதா?
தம்பி திலீபன்…..உன்னிடம் என்னதான் கேட்டான்
எங்களை
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவிடு என்றான்.
எங்கள் மண்ணின்
இறைமையைத் தா என்றான்
இது குற்றமா?
இதற்காகத்தானே போராடினான்
இதற்காகத்தானே போராடினான்
இதற்கு என்ன பதில் தரப்போகின்றாய்……
உன் பதிலை
நேற்று வந்த விமானத்திலும் எதிர்பார்த்தோம்
தாமதித்துவிட்டாய்
நீ கடத்திய ஒவ்வொரு நொடிப் பொழுதும்
இங்கோர் புயலையே உருவாக்கிவிட்டாய்
திலீபன் என்ற புயல்
உன்னைச் சும்மா விடாது
உசுப்பியே தீரும்……..

”நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும்
புரட்சிக்குத் தயாராக வேண்டும் இது தான் எனது இறுதி ஆசை” தியாகி திலீபனின்
இறுதி உரையின் வரிகள் மக்களை புரட்சிக்குத் தயாராகுங்கள் என்று கூறியவண்ணம் அமைதியானது. தியாகி திலீபனுக்கு மிகவும் பிடித்த ‘ஓ மரணித்த வீரனே! – உன் ஆயுதங்களை எனக்குத் தா. உன் சீருடைகளை எனக்குத் தா ‘ என்ற பாடலைக் கேட்டுக் கொண்டே கோமா நிலைக்குச் சென்றார்.

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல் தனது உண்ணாநோன்பைத் தொடர்ந்த தியாக தீபம்திலீபன் 14வது நாள் அதாவது 1987 செப்டம்பர் 26ந்தேதி நல்லூர்க் கந்தன் கோவில் வீதியில் காந்திதேசத்தின் அசோகச் சக்கரத்தால் நசுக்கிக் கொல்லப்பட்டார்
(வீரமரணமடைந்தார்). தமிழீழத் தேசமே அதிர்ந்தது. கிளர்ந்தெழுந்த மக்கள் இந்திய
இராணுவமே வெளியேறு என்று இந்திய இராணுவத்தைத் தாக்கினர்.

”நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என
உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி
விடைபெறுகிறேன்”
-திலீபன்-

திலீபனும் தமிழீழப் போராட்டத்தை விரிவுபடுத்தி ஒரு பெரும் மக்கள் போராட்டமாக
விரிவுபடுத்த விரும்பினார். ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத்
தமிழீழம் மலரட்டும்’ மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த பார்த்தீபனின் கனவு
பலிக்க வேண்டுமானால் தமிழீழமக்கள் திரண்டெழுந்து சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு
எதிராகப் பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர்
மக்களவை அறைகூவல் விடுக்கின்றது.

நாவிழந்து நாதமணி பேச்சிழந்து தூண் துவண்ட
மாதிரியாகப் போய் முடியப் போகிறாயா..
காற்றே நீ நிறுத்து….
கடல் அலையே நீ நிறுத்து…
கூற்றுவனா அவனைக் கொண்டு வந்து தூக்கிலிடு’

-ஈழக்கவி புதுவை ரத்தினதுரை-

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply