இலங்கை-”வரும் 6 மாதத்திற்குள் பாரிய பிரச்னை”-கலாநிதி ஹர்ஷ டி சில்வா

67 Views

”நாம் இந்த பொருளாதார மறுசீரமைப்புக்களை செய்ய தவறும் பட்சத்தில், எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார்.

”பிரிஜ் நிதி கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம். சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமாயின், எமக்கு 3 அல்லது மூன்றரை பில்லியன் அமெரிக்க டொலர் (நட்பு நாடுகளிடமிருந்து) கிடைக்கும். அதாவது வருடமொன்றுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வீதம் கிடைக்கும். எனினும், அது கிடைக்கும் வரை எமது அத்தியாவசிய பொருட்களை எவ்வாறு இறக்குமதி செய்வது. அந்த இடத்திலேயே பிரச்சினை உள்ளது. நாம் எதிர்பார்த்த விதத்தில், எமது நட்பு நாடுகளிடமிருந்து பணம் கிடைக்கவில்லை”

”ஏற்றுமதியின் ஊடாக கிடைக்கும் டொலர் எமக்கு இருக்கின்றது. இறக்குமதிக்கு அந்த தொகையை மாத்திரமே செலவிட முடிகின்றது” என கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார்.

”நாம் கடன் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள போதிலும், கடனை நாம் நிறுத்தவில்லை. நாம் உலக வங்கியிடமிருந்தும், ஆசிய அபிவிருத்தி வங்கியிருடமிருந்தும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் பெற்றுக்கொள்ளும் கடனை நிறுத்த முடியாது. உணவு உட்கொள்ளாதிருந்தேனும், அந்த கடனை நாம் செலுத்த வேண்டும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

”அந்த கடனை செலுத்துவதற்கு, ஏற்றுமதியின் ஊடாக கிடைக்கும் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ள கடன் உடன்படிக்கைகளில் ஆண்டுதோறும் கிடைக்கும் பணத்தை பயன்படுத்த வேண்டும்”

”சர்வதேசத்துடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் இது கிடையாது. இந்த சந்தர்ப்பத்தில் தான் சர்வதேசத்துடன நாம் இணக்கத்துடன் செயற்பட வேண்டும்” என ஹர்ஷ டி சில்வா கூறுகின்றார்.

நன்றி -பிபிசி தமிழ்

Leave a Reply