தமக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ

தமது பாதுகாப்பு பிரிவிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று உத்தரவிடக்கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவையின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

உரியவகையில் பாதுகாப்பு மதிப்பீடுகளை மேற்கொள்ளாது, தமது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

’30 வருடகால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்காக தலைமைத்துவத்தை வழங்கிய தாம், பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவுகிறது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது தமது பாதுகாப்புக்காக எந்தவொரு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லை என்றும், காவல்துறையினரை மாத்திரம் தமது பாதுகாப்புக்காக ஈடுபடுத்தியுள்ளனர் என்றும் மனுவில் அவர் கூறியுள்ளார்.

‘தான்தோன்றிதனமாக தமக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டமையின் ஊடாக, பிரதிவாதிகள் தமது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர்’ என்று தீர்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நீதிமன்றை கோரியுள்ளார்.