யாழ் நவாலி தேவாலய படுகொலை : பொது மக்கள் இருப்பது தெரிந்தே தாக்குதல் நடத்தப்பட்டது -சிவாஜிலிங்கம்

sivajilinga யாழ் நவாலி தேவாலய படுகொலை : பொது மக்கள் இருப்பது தெரிந்தே தாக்குதல் நடத்தப்பட்டது -சிவாஜிலிங்கம்

யாழ். நவாலி தேவாலயத்தில் இருப்பது பொது மக்கள் என்று தெரிந்தே சிறீலங்காவின் விமானப் படையினர், தேவாலயத்தின் மீது தாக்குதல்  நடத்தினார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்  நவாலி சென் பீட்டர் தேவாலயத்தின் மீது இலங்கை அரசு விமான குண்டு தாக்குதல் நடத்தி இன்று 26 வருடங்கள் கடந்து இருக்கின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், “1995ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி இதே  கால கட்டத்தில் சிறீலங்கா விமானப் படையினரால் குண்டு தாக்குதல் நடாத்தி 100க்கும் மேற்பட்ட உயிர்கள் கோரமாக கொல்லப்பட்டு 26 வருடங்கள் கடந்து இருக்கின்றது.

சந்திரிகா அம்மையாரினுடைய ஆட்சி காலத்தில் தமிழர் தாயகப் பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையின்  போது பொது மக்கள் ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சமடைந்து இருந்தார்கள். அப்போது இலங்கையினுடைய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு ‘புக்காரா’ விமானங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில் சிறுவர்கள் பெரியவர்கள் பெண்கள் முதியோர்கள் என்று வேறுபாடு இல்லாமல் உடல் சிதறி பலியானார்கள் பலர் படுகாயம் அடைந்தார்கள்.

இது ஒரு அப்பட்டமான தமிழ் இனப் படுகொலையாகத் தான் நாங்கள் பார்க்கின்றோம். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கத்தாலும் நீதி வழங்கப்படவில்லை.

அந்த அகோர சம்பவத்தில் இறந்தவர்களுடைய உறவுகள் இன்னும் அந்த துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உறவுகளுக்கு நினைவேந்தல் செய்வதற்கும் கூட தற்போதைய ஆட்சியாளர்கள் தடுத்து வருகிறார்கள். இவ்வாறு இனப் படுகொலை செய்யப்பட்ட நினைவுச் சின்னங்கள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் கடந்த ஆண்டும் இம்முறையும் புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டு நினைவேந்தலை செய்வதற்கு இலங்கை இனவாத சிங்கள அரசாங்கம்  தடை விதித்து வருகின்றது.

இது அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறலாக இருக்கின்றது. ஏனெனில் ஒரு உரிமைக்காக போராடிய இனம். அந்த போராட்ட காலத்தில் நடைபெற்ற படு கொலைகளை நினைவுகூற இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் மறுத்து வருகின்ற நிலையில்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி இந்த நாட்டில் நீதி கிடைக்கும் என்ற ஒரு கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்து இருக்கின்றது.

ஆகவே இவற்றிற்கு எல்லாம் ஒரு சர்வதேச நீதி பொறி முறை வேண்டும் என்பதற்காகத் தான் தமிழினம் சர்வதேச நீதி கோரி நிற்கின்றது. ஆகவே இந்த சர்வதேச நீதி கோரலில் நவாலி படுகொலையும் இடம் பெற வேண்டும். அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறான இந்த படுகொலைகளுக்கு  நீதி கிடைக்கின்ற போது தான் எதிர் காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு உறுதியான பாதுகாப்பும் அவர்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்தகின்ற நியாயமான சூழ்நிலைகள் உருவாகும் என்பதை நான் கூற விரும்புகின்றேன்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 யாழ் நவாலி தேவாலய படுகொலை : பொது மக்கள் இருப்பது தெரிந்தே தாக்குதல் நடத்தப்பட்டது -சிவாஜிலிங்கம்

Leave a Reply