தமிழரசு கட்சியின் செயலாளரானார் எம்.ஏ.சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று (16) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.  இதற்கு முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் செயற்பட்டிருந்தார்.

இந்தநிலையில் ‘சுகவீனம் காரணமாக அந்த பதவியில் தம்மால் தொடர்ந்து இருக்க முடியாது’ என்று இன்றைய கூட்டத்தில் ப.சத்தியலிங்கம் தெரிவித்ததையடுத்து பொதுச் செயலாளர் பதவிக்கு எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக்வோல்ஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் இளம் அரசியல் உறுப்பினர்களுக்கு இடையேயான சந்திப்பு ஒன்று நேற்று (15) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதன்போது நடைமுறை அரசியல் விடயங்கள் குறித்தும், தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும், தற்போது கனடா அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.