‘பொய் சொல்வதும் பொய்யாக வாக்குறுதி அளிப்பதுமே இலங்கையின் அரசியல் கலாசாரம்’ பி.மாணிக்கவாசகம்

‘பொய் சொல்வதும் பொய்யாக வாக்குறுதிகளை அளிப்பதும் இலங்கைக்கு ஒரு கலாசாரமாகி உள்ளது. இது முன்னேற்றத்திற்கு உகந்ததல்ல’ இது இலங்கையைப் பற்றிய ஒரு வெளிநாட்டு இராஜதந்திரியின் கருத்து. இந்தக் கருத்தை அவர் ஓர் அமைச்சரின் முகத்திலடித்தாற்போன்று நேரடியாகத் தெரிவித்திருக்கின்றார். ஒரு முக்கிய நிகழ்வில் பலர் கலந்து கொண்டிருந்த நிலையில் பகிரங்கமாக இவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது.

பொருளாதார வீழ்ச்சியினால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இலங்கை இந்த இக்கட்டில் இருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. பொருளாதாரப் பேரிடரில் வீழ்ந்து அதில் இருந்து மீண்டுள்ள நாடுகளின் அனுபவத்தைப் பாடத்தைப் பெற்று அதன் ஊடாக மீட்சி பெற நாடு துடித்துக் கொண்டிருக்கின்றது.

இலங்கையைப் போலவே மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு, முன்னேறியுள்ள தென்கொரியாவின் அனுபவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு மீட்சி அரசு  பெற எத்தனித்திருக்கின்றது. இது தொடர்பிலான ஒரு கருத்தரங்க நிகழ்விலேயே தென் கொரிய நாட்டின் பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் தலைவராகிய சோ சுங் லீ இலங்கையைப் பற்றிய தனது கருத்தை மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

தென்கொரியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான பத்து நாள் கருத்தரங்க நிகழ்வில் வியாழனன்று (டிசம்பர் 21 ஆம் திகதி) சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பஸ்குவல் நிகழ்வுக்கு 30 நிமிடங்கள் தாமதாக வருகை தந்திருந்தார். இதனால் எரிச்சலடைந்த சோ சுங் லீ இலங்கை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நோக்கிக் கடுமையான தொனியில் கருத்துக்களை வெளியிட்டார்.

நிகழ்வுகளுக்குக் குறித்த நேரத்தில் வருகை தரவேண்டியது அவசியம். அவ்வாறு வரத் தவறுபவர்களுடன் பேச்சுக்கள் நடத்துவதில் எந்தவிதப் பலனும் இல்லை. நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்குக் கண்டிப்பாகக் குறித்த நேரத்தில் வரவேண்டும். இவ்வாறு தென்கொரியாவில் எவரேனும் நடந்து கொண்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அவரது அந்த நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அந்த அதிகார பொறுப்புக்கு அவர் தகுதியற்றவராகக் கருதி பதவி நீக்கம் செய்யப்படுவார். ஆனால் இலங்கையில் இது சாதாரண வழக்கமாகக் கருதப்படுகின்றது. ஒரு கலாசாரமாகப் பின்பற்றப்படுகின்றது என்று அவர் கண்டனத் தொனியில் கருத்து வெளியி;;ட்டார்.

இராஜாங்க அமைச்சரின் வருகைக்காக அரை மணித்தியாலம் காத்திருந்துவிட்டு அவரது வருகையையடுத்து, தனது விரிவான கருத்துரையை ஆரம்பித்த சோ சுங் லீ, இலங்கை  அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையைச் சாடினார். ஒருவர் ஒரு பொறுப்பை ஏற்றாராகில் அதனை நேர்மையாகவும் உண்மையாகவும் நிறைவேற்ற வேண்டும். பொறுப்வுணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். பொய்யான முறையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பொய் என்றால் என்ன என்பது குறித்தும் அவர் அந்த நிகழ்வில் தெளிவுபடுத்தினார். ஒன்பது மணிக்கு ஆரம்பமாகின்ற நிகழ்வுக்கு ஒன்பதரை மணிக்கு வருகை தருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்பது மணிக்கு வருவதாக உறுதியளித்துவிட்டு, அரை மணித்தியாலம் தாமதமாக வருவது பொய்யான நடவடிக்கையாகும். ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு வருகின்றவர்களுடன் நாம் ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்?

பொய் சொல்வது இலங்கையில் சாதாரண விடயமாகி உள்ளது. உறுதி மொழிகளை நிறைவேற்றாமல் கோட்டை விடுவது இலங்கையர்களுக்கு சாதாரணமாக இருக்கின்றது. அது ஒரு கலாசாரமாகவே பின்பற்றப்படுகின்றது. வேற்று தேசத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு இலங்கையைப் பற்றி கூறுவது குறித்து இலங்கையர்கள் வெட்கப்பட வேண்டும். ஒரு பாரம்பரியமாகியுள்ள இந்த கலாசாரத்தை மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்ற வேண்டியது மிக முக்கியம். நாங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாகவும் இருக்க வேண்டும். பொறுப்புக்களை ஏற்றால் நூறு வீத பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியதும் அவசியம். ஏற்கின்ற பொறுப்புகளுக்கான வேலைகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்து முடிக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படியல்ல. ஏற்கின்ற பொறுப்பை மிக சாதாரணமானதாகக் கருதிச் செயற்படுவதே இங்குள்ள பிரச்சினை. நான் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால், நேர்மையாகவும் உண்மையாகவும் அதனை உயிரைக் கொடுத்துச் செய்து முடிப்பேன் என்று ஒரு நீண்ட விளக்கத்துடன் கூடிய வகையில் அமைச்சரின் பொறுப்பற்ற தன்மைiயுயும் இலங்கையின் நிலைமைகளையும் எடுத்துக் கூறினார்.

அவருடைய கூற்றை உள்ளடக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் மிக வேகமாகப் பரவி பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. இலங்கையின் பொதுவான முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள பொய்மைத் தன்மையையும் பொறுப்பற்ற செயற்பாட்டு முறைமைகளும் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இலங்கையில் நேர்மையான அரசியல் என்பது மருந்துக்கும் கிடையாது. சுய இலாபத்துக்கான அரசியலே பல்வேறு வடிவங்களில் முதன்மை பெற்றிருக்கின்றது. கட்சி அரசியலும் இனரீதியான அரசியலும் மேன்மை பெற்றுள்ள நிலையில் அதற்காக எத்தனை பொய்களையும் கூசாமல் கூறுகின்ற தன்மை ஓர் அரசியல் கலாசாரமாகப் பரிணமித்திருக்கின்றது. நேர்மையாக ஆட்சி நடத்த வேண்டும். ஜனநாயகத்தைப் பேண வேண்டும். மனித உரிமைகளை மேம்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் நலன்களை முதன்மைப்படுத்திய வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுவதெல்லாமே வெறும் வாய்ப்பந்தலாகவே அமைந்திருக்கின்றன.

அந்நியரின் ஆட்சியில் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலாக இத்தகைய போலியான அரசியல் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் போலி அரசியலுக்கு புத்த தர்மத்தையும் பஞ்ச சீலத்தையும் பேரின அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி பேராதரவாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். அரசியலுக்கும் ஆட்சிக்கும் பௌத்தத்தையே ஆணிவேராகக் கொண்டிருக்கின்றனர். அந்த பௌத்தமும் பொதுமை நிலையிலான புத்த மதம் சார்ந்ததல்ல. உலகில் முக்கிய பொதுவான மதமாகக் கருதப்படுகின்ற பௌத்த மதத்தை சிங்கள இனத்துடன் பிணைத்து, சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று ஒரு குறுகிய வட்டத்தில் சிங்கள பௌத்தமாக வளர்த்தெடுப்பதற்கான வழிமுறையை நாட்டின் அரசியலுடன் இரண்டறக் கலந்து செயற்பட்டு வருகின்றார்கள். இலங்கையின் இத்தகைய பிற்போக்கான அரசியலை தென்கொரிய இராஜதந்திரி சோ சுங் லீ தோலுரித்துக் காட்டியிருக்கின்றார்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும். பௌதத மதத்தைப் போலவே இந்து மதம் உள்ளிட்ட ஏனைய மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்படும். இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழர்களின் காணிகள் மீளக் கையளிக்கப்படும் என்று வரிசையாக எத்தனையோ வாக்குறுதிகளைப் நீண்ட பட்டியலொன்றில் பேரின ஆட்சியாளர்கள் வழங்கியிருக்கின்றார்கள். இத்தகைய அரசியல் வாக்குறுதி வழங்குகின்ற போக்கு காலம் கடந்த நிலையிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றதே தவிர, அவற்றை நிறைவேற்றுவதில் எந்தவோர் ஆட்சியாளரும் இதுவரையில் நேர்மையாக நடந்து கொண்டதில்லை.

இத்தகைய ஒரு பிற்போக்கான நிலையிலேயே ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒரு தடவை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும். தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று பகிரங்கமாக உறுதியளித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றார். இந்த உறுதி மொழி எந்த அளவுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் பொறுப்புணர்ச்சியுடனும் நிறைவேற்றப்படப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.