பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின், நடைபெற்ற பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி பிரிட்டனின் அடுத்த பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் பிரிட்டனின் நிதி அமைச்சராக ரிஷி சுனக்கின் திறமை பிரபலம் பெற்றிருந்தாலும், நாட்டின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் அவருக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. அவரது போட்டியாளரும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான லிஸ் டிரஸ், பிரதமருக்கான வாக்கெடுப்பில் அவரை விட மிகவும் முன்னிலை பெற்று புதிய பிரதமர் ஆகவுள்ளார்.
ரிஷி சுனக் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக இருந்திருக்கும். அவர் பிரிட்டனின் வெள்ளையர் இனம் அல்லாத முதல் பிரதமர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதமர் ஆகிய பெருமைகளைப் பெற்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.