ஈழத்தமிழர்களின் இருப்பிற்கு அரணாக வாக்களிப்பு யுத்தம் செய்வோம்!

227 Views

நடைபெறவிருக்கும் இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், தமிழர் தேசத்தின் இருப்பையும் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஈழத்தமிழரும் தமது வாக்குகளை பயன்படுத்துமாறு வேண்டுகின்றோம்.

ஒற்றையாட்சி முறையை அடிப்படையாக கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத சித்தாந்தத்தின் இயங்குதலில் செயற்படும் இலங்கை பாராளுமன்றத்திற்குள் தமிழர்களுக்கு என்றுமே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வுகிட்டப்போவதில்லை. இதனடிப்படையில்தான் வரலாற்று படிப்பினைகளினூடாக கிடைத்த பட்டறிவின்பாற்பட்டே தமிழர்களுக்கான விடுதலையை அடைய ஆயுதப் போராட்டம் வராலாற்றுத் தன்னியல்பாய்த் தொடங்கப்பட்டது.

இவ்வழியே ஈழத்தமிழர்களது இருப்பை பாதுகாக்கும் ஒரே வழியென்பதை ஆயுத மௌனிப்பு வரையான ஈழத்தமிழர்களின் நிலையே சாட்சியாகும். எமக்கென்றொரு நிழல் அரசு இருந்தது. எமக்கென்றொரு தாயக பிரதேசம் இருந்தது. எமது கலை-காலாசார-பண்பாட்டு விழுமியங்களை முன்னெடுக்கும் உரித்தை நாங்கள் பெற்றிருந்தோம். தமிழர்கள் என்ற அடையாளத்தோடு தலை நிமிர்ந்த வாழ்வை வாழும் உரிமையோடு வாழ்ந்தோம்.

முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பை வலுவான ஆயுதமாகப் பயன்படுத்தி அதற்கான நீதிகோரும் போராட்டத்தை வீச்சாக்கியிருந்தால் இன்று ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பான நிலை நிச்சயம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இனவழிப்பை மறுதலித்து இனவழிப்பாளர்களைக் காப்பாற்றி தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கி உள்ளனர்.

தமிழ்த் தேசியத்தின் பெயரால், தமிழீழ விடுதலைப் போராட்ட தியாகத்தின் பின்னணியில் தமிழ் மக்களால் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக ஏற்றி வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கடந்த 10 ஆண்டுகால செயற்பாடே எம்மை அரசியல் இக்கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இத்தருணத்திலேனும் நாம் விழித்துக் கொள்ளவில்லையாயின் ஆண்டாண்டு காலத்திற்கு அடிமைப்பட்ட இனமாக நாம் மாறுவதை தவிர்க்க இயலாது. தென்னிலங்கையில் பௌத்த சிங்கள அரசு பலம்பெறும் போது தமிழர்களின் பூர்வீக பூமியாக திகழ்ந்த இலங்கைத் தீவு பௌத்த சிங்களத் தீவாக மாற்றம் பெறுவது திண்ணம். அப்போது இலங்கைத் தீவின் பூர்வீக குடிகளான ஈழத்தமிழர்களின் நிலை மண்டியிட்டு உயிர்ப்பிச்சை கேட்கும் இழிநிலை நிச்சயம் வந்து சேரும்.

இன்று தமிழ்மக்களின் வாக்குகள் சிதைக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர் அரசியல் பெரும் பரப்பில் இருந்து தமிழ்த் தேசியத்தை நீக்கும் நயவஞ்சகத்தனத்தை அரங்கேற்றி வரும் தமிழ்த்தேசிய விரோதக்கட்சிகள் தமிழர்களின் வாக்குகளைச் சூறையாடும் வேலையைக் கனகச்சிதமாகச் செய்கின்றனர். ஏனவே தமிழ்மக்கள் எதிர்வரும் தேர்தலில் கடந்த பதினொரு வருடப் பட்டறிவைக் கவனத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் சரியான கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

வடக்குக் கிழக்கில் பௌத்த சிங்கள பெருந்தேசியக் கட்சிகள் வலுவாக காலூன்றும் நிலை ஏற்படும் துர்பாக்கிய நிலையை நோக்கி நாம் கரைந்து கொண்டிருக்கின்றோம். தமிழர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிங்கள தேசியக் கூட்டமைப்பாக மாறிவிட்டதென்பதை கடந்த நான்கரை ஆண்டுகால செயற்பாடுகள் தெட்டத்தெளிவாக எடுத்தியம்பி நிற்கின்றது.

ஆதலால், ஈழத்தமிழர்களுக்கு எதிராக முள்ளிவாய்க்காலிலே சிறீலங்கா அரசு மேற்கொண்டது இனஅழிப்பு. இதற்கு சுதந்திரமான சர்வதேச விசாரணை மூலமே நீதிகிடைக்கும் என்ற நிலைப்பாட்டை கடந்த பதினொரு ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெளியிட்டுஇ அதற்கமைவாக தமிழர்தாயகத்திலும் சர்வதேச ரீதியிலும் செயற்பட்டுவருகின்ற தரப்புகளை இனம் கண்டு அவர்களுக்கு வாக்களிக்குமாறு அன்புரிமைமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

அதேவேளைஇ பூகோள அரசியலை புரிந்து, எமது தமிழ்த் தேச அங்கீகாரத்திற்காக சமரசமின்றி சமராடி வருகின்ற கட்சிக்கு வாக்களிப்பது சர்வதேச மயப்பட்டுள்ள எமது விடுதலைப் போராட்டத்தின் இலக்கினை எட்டுவதற்கு துணைபுரியும் என்பதையும் கவனத்திற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

தந்தை செல்வாவின் கோட்பாட்டைக் கைவிட்டுஇ மண் மீட்புப் போரில் மரணித்த மாவீரர்களின் தியாகங்களையும் உதாசீனம் செய்துஇ ஈழத் தமிழர்களின் தேசக் கோட்பாட்டை அழிக்க வரிந்துகட்டிக் கொண்டு சிங்களத்துக்கும் வேற்று சக்திகளுக்கும் சேவகம் செய்ய முற்படும் தேசவிரோதக் கும்பலை நிராகரித்துஇ தமிழர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கொள்கையுடன் தேர்தலில் களம் இறங்கும் சரியான வேட்பாளர்களை இனங்கண்டு வாக்களிக்க வேண்டும்.

சிங்கள இனவாதிகளின் கூடாரமான பாராளுமன்றில் தமிழர்களுக்கான தீர்வைப் பெறுவது கல்லில் நாருரிப்பது போன்றது எனத் தெரிந்தும் தமிழ் விரோதச் சக்திகளுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காவது இத்தேர்தலில் சரியானவர்களுக்கு தமிழர்கள் தங்கள் வாக்குத் தோட்டாக்களைப் பாச்சவேண்டும்.

அதுமட்டுமல்லாது எமது பாரம்பரிய தாய் நிலத்தில் எமது இருப்பையும் உரித்தையும் வரப்போகும் தனி பௌத்த சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமாயின் தமிழ்த் தேசத்தையும்இ தமிழ் மக்களையும் காத்து நிற்கும் விலைபோகாத தரப்பை அரசியல் பிரதிநிதிகளாக்குவது ஒன்றே வழியாகும்.

இவ்வாறானவர்களை இனம் கண்டுஇ அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வதனூடாகவே மாவீரர் கண்ட இலட்சியத்தை நனவாக்க முடியும். மண்ணுறங்கும் மாவீரர்கள் தம்மை அழித்து நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பற்காக வீரமரணமேற்றார்கள். இன்று எமக்காக நாமே வாக்கு புரட்சி செய்து எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழர்களைப் பொறுத்தவரை தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் நடைபெறுகிறது என்பதை உணர்ந்து செயற்பட முன்வாருங்கள். போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் மாறப்போவதில்லை. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழர் வாழ்வு விடியட்டும்.

«தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்»

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Leave a Reply