மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்! – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

376 Views

ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்!

மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்!

வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இலங்கை அரசு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் சிக்கி, முற்றாக வீழ்ச்சி அடையும் நிலையை எட்டியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பு 2.3 பில்லியன் டொலர்களை எட்டியதால், இரண்டு மாதங்களுக்கே பொருட்களை இறக்குமதி செய்யப் போதுமான நிலையை அது தோற்றுவித்துள்ளது. அதாவது பொருட்களை இறக்குமதி செய்வதற்குக்கூட பணம் இல்லாது தவிக்கும் அரசு, தற்போது சிங்கள மக்களின் எதிர்ப்பலைகளையும் சந்திக்க ஆரம்பித்துள்ளது.

ஒவ்வொரு தொழிற்சங்கங்களும், ஊதிய அதிகரிப்புக் கோரி, வீதிகளில் இறங்கிப் போராடுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, அரசுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தை இலங்கை அரசு காவல்துறையைக் கொண்டு அடக்க முற்பட்டபோதும், அதனையும் மீறி மக்கள் பெருமளவில் கலந்துகொண்டது, சிங்கள மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பிரதிபலித்துள்ளது.

எதிரியின் பொருளாதார வீழ்ச்சி, அவன் பலத்தைக் குறைப்பதுடன், எமது கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வழிவகுக்கும். அந்த உத்தியைத்தான் மேற்குலகம் பொருளாதாரத்தடை என்ற போர்வையில் பல நாடுகள் மீது மேற்கொள்வதுண்டு. அதில் அவர்கள் வெற்றியும் காண்பதுண்டு.

இலங்கையின் தற்போதைய இந்த நெருக்கடிகளுக்கான மூலகாரணம் யாதெனில், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனஅழிப்பும், அதற்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களுமே ஆகும். தாராளப் பொருளாதாரக் கொள்கையை இலங்கை அரசு 1970 களிலேயே கடைப்பிடித்தாலும், முதலீட்டாளர்களை மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா, பங்களாதேசம் என ஓட வைத்தது விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தான்.

இலங்கையின் வரலாற்றில் இரண்டு தடவைகள் தான் பொருளாதாரம் எதிர்மறையான பின்னடைவைச் சந்தித்திருந்தது. ஒன்று கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீதான தாக்குதல். இரண்டாவது கோவிட்-19 நெருக்கடி. எனவே இலங்கை அரசின் இனஅழிப்புக்கு எதிரான தமிழ் மக்களின் எதிர்ப்புப் போர் என்பது எவ்வளவு தூரம் சிங்கள மக்களைப் பின்தள்ளியுள்ளது என்பதை நாம் அனுமானித்துக் கொள்ளலாம்.

போர் நிறைவடைந்த பின்னரும், அதன் தாக்கத்தில் இருந்து இலங்கை அரசினால் மீளமுடியாததற்கான காரணம், அங்கு நிலவும் அரசியல் நெருக்கடிகள் தான் என்பதுடன், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் போராட்டங்களுமே எனலாம்.

பொருளாதார வீழ்ச்சி ஒருபுறமிருக்க, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக அழுத்தங்கள் என்பது, பூகோள அரசியல் நலன்சார்ந்து இருந்தாலும், அதற்கான ஏதுநிலைகளை உருவாக்கியதும் எமது விடுதலைப்போர் தான். எனவேதான் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு இலங்கையின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தோல்வியடைந்துள்ளார்.

ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்!இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 2008 – 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சட்டமா அதிபராகவும், 2013 ஆம் ஆண்டில் பிரதம நீதியரசராகவும் பதவி வகித்தவர் என்ற அடிப்படையில், பொறுப்புக் கூறலையும், நீதியையும் நிலைநாட்டத் தவறிய மொஹான் பீரிஸ், இனப் படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்குப் பரிந்துரை செய்யப்பட்டமை தொடர்பில் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அதேசமயம் தமிழ் இனத்தை அழிப்பதற்குக் கூட்டாக நின்ற பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளிடமும் தற்போது விரிசல்கள் தோன்றியுள்ளன. மியான்மாரிலும், ஆப்கானிலும் தனது முதலீடுகளை இழந்த இந்தியா, தற்போது சூடானையும் சீனாவிடம் பறிகொடுக்கும் நிலையை எட்டியுள்ளது. அந்த இழப்புக்களை ஈடுசெய்வதற்கு இலங்கையைக் கைப்பற்ற முனைந்து நிற்கின்றது இந்தியா.

ரஸ்யாவின் எஸ் – 400 ஏவுகணைகள் அடுத்த மாதங்களில் இந்தியாவை வந்தடைவதும், அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான உறவுகளையும் பாதிக்கலாம் எனக் கருதப்படுகின்றது. துருக்கி மீது தடைகளை விதித்த அமெரிக்கா, இந்தியா மீது என்ன நடவடிக்கையை மேற்கொள்ளப் போகின்றது என்பது ஏனைய நாடுகளின் போக்கில் மாற்றத்தைத் தீர்மானிக்கும்.

இந்த நிலையில், தமிழ் இனத்தின் முக்கியத்துவம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி, தனது இந்திய இலங்கை உடன்பாட்டை தக்கவைக்க முற்பட்டு நிற்கின்றது இந்தியா. அதேசமயம், தமிழர் தரப்பை நேரிடையாகக் கையாள முற்பட்டு நிற்கின்றது அமெரிக்கா.

சிறுபான்மை மக்களின் அரசியல் பிரசன்னத்தைப் பாதுகாப்பதே அமெரிக்காவின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான திணைக்களத்தின் பிரதித் துணைச் செயலாளர் லீசா பீற்றேசன்.

ஆனால் இந்த இரு நிகழ்வுகளும் பிரிந்து நிற்கும் தமிழ்க் கட்சிகளிடம் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் ஏதுநிலைகளைத்தான் தோற்றுவித்துள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.

இதனிடையே தான் தப்பிப்பிழைக்க, புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீட்டை எதிர்பார்த்து நிற்கின்றது இலங்கை அரசு. வடக்கிற்கு இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட புதிய ஆளுநரின் ஊடாகத் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என எண்ணுகின்றது. அதாவது எமது பணத்தைக் கொண்டு எமது நிலத்தை ஆக்கிரமித்து, எமது இனத்தை அழிப்பது தான் அதன் உத்தி.

ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்!இந்த நகர்வுகளில் இருந்து எம்மைக் காத்து, நாம் எமது இலட்சியத்தை அடைய வேண்டு மானால், அதற்கான புதிய அணுகுமுறைகள் அவசியம். எல்லா நாடுகளையும் அனுசரித்துப் போவதற்கும் எமக்கான அங்கீகாரத்தைக் கோருவதற்கும் ஏதுவாக எம்மிடம் தெளிவான வெளிவிவகாரக் கொள்கையும், அதனைச் செயற்படுத்தும் ஒற்றுமையும் தேவை.

எனெனில் தற்போதைய பூகோள அரசியல் முக்கியத்துவம், பல தரப்பினருடன் உறவை மேம்படுத்தும் நிலையை எமக்குத் தோற்றுவித்துள்ளது.

இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதில் எமக்கிடையிலான ஒற்றுமையே பிரதான பங்கு வகிக்கப் போகின்றது. இதனை எமது அமைப்புக்கள் மற்றும் கட்சிகளிடம் உருவாக்குவதில் மக்களின் பங்கே முக்கியமானது.

மாவீரர்களை நினைவுகூரும் வாரம் (21) ஆரம்பமாகியுள்ளது. எமது இனத்தின் விடுதலைக்காக தமது உயிர்களை இழந்தவர்களை நாம் எமது நெஞ்சில் நிறுத்தி வணங்கும் காலம் இது.

இதனை நாம் வருடம்தோறும் நினைவுகூர்ந்து வருவதுடன், எமது அடுத்த தலைமுறையினருக்கும் அதனைக் கொண்டுசேர்க்க வேண்டிய கடப்பாடு ஒன்று உள்ளது.

ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்!எமது தேசியத் தலைவர் கூறியதுபோல, “மாவீரர் நாள் என்பது, ஒரு விழா அல்ல; அது உயிர்த் தியாகங்கள் செய்தவர்களை நினைவில் கொள்வதுடன், அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றும் செயற்பாடுகளை நோக்கி எம்மையும் மக்களையும் உந்தித் தள்ளும் ஒரு நிகழ்வு”.

அதாவது மாவீரர்களின் கல்லறைகள் மீது நாம் மலர் அள்ளி போடும்போது கடந்த ஒரு வருடத்தில் இந்த மாவீரர்களின் கனவை நனவாக்க நான் என்ன பணியாற்றினேன் என சிந்திப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

இது மக்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். ஏனெனில் அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காகப் பணியாற்றாத நாம், அல்லது அதற்காக ஒருங்கிணைந்து செயற்பட முனையாத நாம், அவர்களுக்கு அஞ்சலிகளை மட்டும் நிகழ்த்துவதில் பலனில்லை.

இதனை நெஞ்சில் நிறுத்தி, அடுத்த மாவீரர் நாளுக்கு முன்னர் நாம் எல்லோரும் எமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து, இலட்சியத்திற்காக ஒருங்கிணைவோம் என உறுதிகொள்வதே நாம் இன்று செய்யவேண்டிய முதன்மையான பணியாகும். அதன் மூலம் தான் எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்! - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

Leave a Reply