உரிமைகளைப் பாதுகாத்தவாறு கொரோனாவை வீழ்த்த அரசியலைக் கடந்து ஒன்றிணைவோம் – விக்னேஸ்வரன்!

444 Views

C V Wigneswaran உரிமைகளைப் பாதுகாத்தவாறு கொரோனாவை வீழ்த்த அரசியலைக் கடந்து ஒன்றிணைவோம் - விக்னேஸ்வரன்!

அரசியல் காழ்புணர்வுகளைத் தாண்டி கொரோனா எனும் பேரிடரிலிருந்து நாட்டையும், உயிர்களையும் பாதுகாத்து வீழ்ந்து போகும் பொருளாதார நிலையிலிருந்தும் மீண்டெழுவதற்கு ஒன்றுபட்டு நிற்கும் அதேவேளை, தமிழ் மக்களின் உரிமைகள், உடைமைகள் பறிபோகாமல், நிரந்தர அரசியற் தீர்வைப் பெறுதல் என்ற விடயங்களிலும் உறுதியுடன் செயற்படுவோம் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனாவைக் காரணம் காட்டி அரசியல்வாதிகள் ஈடுபடும் அரசியல் செயற்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று நோய் நெருக்கடி குறித்து இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

உலகின் பல்வேறு நாடுகள் போன்று இலங்கையும் சென்ற வருடத்தில் இருந்து தற்போது வரை கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கி பல மனித உயிரிழப்பு க்களையும், நாட்டிற்கும், குடும்பங்களுக்கும் பொருளாதார இழப்புக்களையும் சந்தித்து வருகின்றது. தற்போது மிகவும் ஆபத்தான நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது. தினசரி 100 – 150 வரை உயிரிழப்புக்கள் இலங்கையில் ஏற்படுகின்றது. எனவே இலங்கையிலுள்ள சகல மொழிபேசும், சகல மதம் சார்ந்த எல்லோரும் கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ளதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சுனாமியின் போது போரில் ஈடுபட்டிருந்த அரச படைகளும் விடுதலைப் புலிகளும் சில நாட்கள் தமது பகைமையை மறந்து ஒன்று சேர்ந்து மக்களுக்கு உதவி புரிந்ததை இத் தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஆகவே அரசியல் வேறுபாடுகள் தாண்டி கொரோனாவிலிருந்து நாட்டை எப்படி மீட்கலாமென நாமனைவரும் ஒன்றுபட்டுச் சிந்திக்க வேண்டும். அந்த வகையில் பின்வரும் விடயங்களில் நாம் அனைவரும் கவனம் செலுத்துவது சிறப்பானதாகும்.

  1. சுகாதாரத் துறையினரின் அறிவுரைப்படி தனிநபர் சுகாதரம் பேணப்படல் அவசியம்.
  2. தொழிலுக்குச் செல்வோர் தவிர மற்றவர்கள் வீடுகளிலேயே தங்கியிருத்தல் நன்மைதரும்.
  3. ஏதேனும் தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது தவறாது முகக்கவசம் அணிதலும், தனிநபர் சமூக இடைவெளிகளைப் பேணலும் அவசியம். குறிப்பாக தற்போதைய இக்கட்டான காலத்தில் இரண்டு முகக்கவசங்களை அணிவது சிறப்பானது. காரணம் வீரியமிக்க டெல்ரா வகைக் கொரோனா வைரசின் பரவல் இலங்கையில் அதிகரித்துள்ளது. நான் கூட சற்று கவனமில்லாமல் இருந்து விட்டேன். தற்போது விழித்துள்ளேன். எம்மவர்கள் யாவரும் இந்த அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்த முன்வருவோமாக!
  4. அனைவரும் தேவையற்ற வகையில் ஒன்று கூடும், ஒன்று திரளும் நிகழ்வுகளைத் தவிர்த்தல் வேண்டும். பெரிய நிகழ்வுகளெனின் ஒருசில மாதங்களுக்காகவாயினும் ஒத்தி வைத்து நடாத்துதல் சிறப்பு.
  5. சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்படி 02 நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை நோ போன்ற சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலை அல்லது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையைத் தொடர்பு கொள்ளல் வேண்டும்.
  6. வெளியில் சென்று வருவோர் தவறாது மூக்கு, தொண்டைப் பகுதியில் இருக்கக் கூடிய கொரோனா வைரசினைக் கொல்லும் வகையில் தவறாது வேது பிடித்தல் வேண்டும். கொதி நீரில் ஆயுர்வேத தைலத்தில் சிறிதைச் சேர்த்து வேது பிடிக்கலாம்.
  7. மிக முக்கியமான விடயம் என்னவென்றால் அனைவரும் தவறாது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசியின் பெயரென்ன? எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது? இந்தத் தடுப்பூசியைப் போட்டால் உயிரிழப்பு ஏற்படுமா? அமெரிக்காவின் ‘பைசர்’ (pfizer) தடுப்பூசி வரும்வரை காத்திருப்போம் என்றெல்லாம் பாராது அந்தந்தப் பகுதிகளில் எந்தத் தடுப்பூசி வழங்கப் படுகின்றதோ அதனை 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரு தடவைகள் தவறாது பெறுதல் வேண்டும்.
  8. இஸ்ரேல். பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் அனைவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்ற இறுக்கமான நடைமுறையைப் பேணி இன்று கொரோனாவின் மோசமான தாக்கத்திலிருந்து விடுபட்டுள்ளதால் நாமும் சுகாதாரத் துறையின் அறிவுரைப்படி அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வோம்.

இறுதியாக அரசியல் காழ்புணர்வுகளைத் தாண்டி கொரோனா எனும் பேரிடரிலிருந்து நாட்டையும், உயிர்களையும் பாதுகாத்து வீழ்ந்து போகும் பொருளாதார நிலையிலிருந்தும் மீண்டெழுவதற்கு ஒன்றுபட்டு நிற்போமாக! அதே வேளை எமது தமிழ் மக்களின் உரிமைகள் உடைமைகள் பறிபோகாமல், நிரந்தர அரசியற் தீர்வைப் பெறுதல் என்ற விடயங்களிலும் உறுதியுடன் செயற்படுவோமாக! கொரோனாவைக் காரணம் காட்டி அரசியல்வாதிகள் ஈடுபடும் அரசியல் செயற்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து உரிய நடவடிக்கைகள் எடுப்போமாக” என்றுள்ளது.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply