பிறரது உணர்வு பூக்களுக்கு உன்னத மரியாதை வழங்குவோம்- கவிதா ஆல்பேட்

108 Views

உடலையும், உயிரையும் படைத்த கடவுள் அந்த மனதினுள் வைத்த அழகான, அற்புதமான பரவச உணர்வுகளை பூக்க வைக்கும் உணர்வு பூக்களாகும். அந்த உணர்வு பூக்களின் உதவி கொண்டுதான் நாம் உணவுகளின் சுவையை உணர்கின்றோம். உயிரின் இயக்கத்தையும் உடலில் ஏற்படும் அதிர்வலைகளையும் உணர்கின்றோம்.

அதுதான் நமக்கு இன்பத்தையும், துன்பத்தையும் பகுத்தறியும் மொழியாகவும் அமைகிறது. உணர்வு பூக்கள் நம்மில் பூக்கவில்லை என்றால் நாமும் உயிரற்ற நிலையில்தான் இருந்திருப்போம். நமது உயிரின் இயக்க நிலையை உணர்வுகள் ஒழுங்கு படுத்துகின்றன.

நல்ல நினைவுகளும், நல்ல சிந்தனைகளும், நல்ல செயல்பாடுகளும் நல்ல உணர்வு பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றன. அழகான காட்சிகளை காணும் போதும், இயற்கை வளமும், வனப்பும் மிகுந்த இடத்தில் இருக்கும் போதும் நமது மனது சிலிர்ப்படைக்கிறது.

அதற்குக் காரணம், நமது உணர்வு நரம்புகளானது இரசிக தாகம் பெற்று அந்த அற்புத சூழ்நிலையில் தன்னை இணைத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் துன்பகரமான ஒரு நிகழ்வு அல்லது சூழலை நாம் எதிர்கொள்ளும் போது நமது உணர்வு நரம்புகள் நம்மை சலனமடைய செய்து நம்முன் சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது.

இப்படி நன்மையையும், தீமையையும் பகுத்தாய்ந்து அதற்கேற்ற உணர்வு வெளிப்பாட்டை நம்மில் பூக்கச் செய்யும் உணர்வு நரம்புகளை நாம் பெற்றிருந்தும் பல நேரங்களில் நாம் உணர்ச்சியற்ற நிலையில் மனித நேயம் இழந்தவர்களாக காணப்படுகிறோம். அதனால் தான் உலகில் ஏராளமான அநீதிகள் அரங்கேற நாமும் காரணமாக இருக்கின்றோம்.

மரங்கள் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன, நமக்கு கவலை இல்லை. வனங்கள் வெட்டப்பட்டுக் கொண்டும், அழிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. அதற்கும் நமக்கு கவலை இல்லை. குழந்தையை போல கையாள வேண்டிய பூமியின் மீது சுமைகளை ஏற்றுவதும், அதன் மடியில் இருந்து அனைத்தையும் களவாடுவதுமாக நாம் பூமியை தொந்தரவு செய்துவிட்டு, துயரம் தாங்க முடியாத அதன் வேதனை வெளிப்பாடு கண்டும் நமக்கு கவலை இல்லை.

இப்படி நாம் சுயநலப் பாதையில் சுகங்களைத் தேடி பயணிக்க கற்றுக் கொண்டு வருகிறோம். இயற்கையோடு இணைந்திருந்த வாழ்க்கை நிலையை மாற்றி முற்றிலும் செயற்கையான உலகத்துக்குள் வாழ பழகிக் கொண்டு வருகிறோம். இளையோராகிய உங்களின் வாழ்க்கை கல்வி, காதல் அந்தக் காதலை அரங்கேற்ற ஓர் அற்புதமான வேலை வாய்ப்பு என்ற நிலையில் உங்கள் வாழ்க்கை வட்டம் மிகச்சிறியதாக சுருங்கி விட்டது.

ஆனால், அந்த மிகச்சிறிய வட்டத்திற்காக நீங்கள் போராட வேண்டிய போராட்டம் இருக்கிறதே! பலரது இளமைப் பருவம் தொலைந்து போவதற்கே அது காரணமாக அமைந்து விடுகிறது. காலமும், கடவுளும் மனித குலம் சிறப்பாக வாழ அழகான மாற்று வழியை இப்போதும் தயாராகத்தான் வைத்திருக்கின்றன. ஆனால் அந்த மாற்று வழியில் நாம் பயணிக்க தயங்குவதால் தான் மறுமலர்ச்சியான வாழ்வை இழந்து விடுகிறோம்.

மனிதனின் உள்ளம் எப்போதும் பிறரது நலனை நாடுவதாக அமைய வேண்டும். அப்போது துரோகத்துக்கும், பொற்றங்களுக்கும் ஒருபோதும் அங்கு இடம் இருக்காது. பிறர் என்ன நினைக்கிறார்கள்? நம்மிடமிருந்து அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? என்பதை நாம் புரிந்து கொண்டு வாழும் உணர்வு ரீதியான வாழ்க்கை எப்போதும் நம்மை மேன்மையான இடத்திற்கு கடத்திச் செல்லும்.

அடுத்தவர் பொருட்களை அபகரிக்க நினைப்பதும், பிறரது நாடுகளை நம் வசமாக்கி கொண்டு நம்மை வலிமையானவர்களாக காட்டிக்கொள்ள எண்ணுவதும், பிறரது உணர்வுகளை கொன்று உயிர் குடிக்கும் கொடிய காட்டு விலங்குகளின் குணத்தை ஒத்தவர்களாகத்தான் இருக்க முடியும். இன்றைய இளையோர் நம்மைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் உணர்வு ரீதியாக சிந்தித்துப் பார்க்க தவறி விடுகின்றனர்.

சக மனிதன் துன்பத்திற்கு உள்ளாகும் போதும் சரி, தேடலில், தேவையில் இருக்கும் போதும் சரி அந்த துன்பத்தை நமது துன்பமாக உணரும் மனிதர்கள் காலத்தால் கணக்கில் வைக்கப் பெற்று கைமாறு பெறுபவர்களாகின்றனர். இன்று மற்றவர்களுக்கு வருகின்ற நிகழ்வு நாளை நமக்கோ அல்லது நமது குடும்பத்தினருக்கோ நிகழலாம். இன்று நாம் செய்யும் நன்மைக்கு அப்போது நமக்கு நிச்சயமாக கைமாறு கிடைக்கும்.

இன்றைய பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை செல்வத்திலும், செல்வாக்கிலும் உயர்ந்தவர்களாக நிலையை நிறுத்துவதில் எடுத்துக் கொள்கிற அக்கறை தங்கள் பிள்ளைகள் மனிதநேயம் மிகுந்தவர்களாக, உலகை பற்றிய உணர்வு உள்ளவர்களாக, பரந்த பார்வை உடையவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. அதனால் அவர்களது குழந்தைகளுக்கு உலகம் புரிவதில்லை; கிணற்றுத் தவளைகளாக இருந்து வருகின்றனர்.

அன்பு இளையோரே, நீங்கள் அறிவாளிகளாக, மேதைகளாக, வித்தகர்களாக, விஞ்ஞானிகளாக இருப்பது பெருமை தான். ஆனால், அவற்றை விட மேலானது நாம் வாழும் பூமியை காப்பதும், பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும், மனிதநேயத்தோடு வாழ்வதும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. நமது சொல், செயல், சிந்தனை அனைத்தும் மாற வேண்டும்.

நமது சொல்லோ அல்லது செயலோ அல்லது சிந்தனையோ நமது உலகிற்கோ அல்லது பிற மனிதருக்கோ தீய விளைவுகளை ஏற்படுத்துகிறதா? என்று உணர்வு ரீதியாக எண்ணிப் பார்க்க வேண்டும். பிறரது உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கும் போது சுயநலத்தை சுட்டெரிக்கிறோம். மனிதநேயத்தை மாணபோடு வளர்க்கிறோம். பண்பாட்டை பாதுகாக்கிறோம். உறவு பூக்களை பூத்துக் குலுங்க செய்கிறோம்.

அப்படி நமது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் போது நாம் காலத்தை பாதுகாக்கிறோம். நமது சந்ததியினரின் வாழ்வுக்கு பாதுகாப்பளிக்கின்றோம். அழிந்து வரும் உலகை அழியாமல் பாதுகாக்க நாம் திட்டமிடுபவர்களாக, நமது பங்களிப்பை தருபவர்களாக மாறுகிறோம்.

“நமக்கேன் வம்பு” என்று நமது கண் முன்னால் காணும் கொடுமைகளை கண்டும் காணாதது போல கடந்து செல்வோமானால், நாளை நாம் விழுந்து கிடக்கும் போது நம்மை தூக்கி விட வேண்டியவர் நம்மை தூக்கி விட விரும்பாமல் கடந்து செல்வதை நாம் காண நேரிடும்.

எனவே பிறரது உணர்வு பூக்களுக்கு நாம் மரியாதை வழங்குவோம். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வோம். உலகில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக நம்மால் இயன்ற நன்மைகளை செய்வோம். சின்ன சின்ன துளிகள் சேர்ந்துதான் குளமாகவோ, நதியாகவோ முடிவில் கடலாகவோ மாறுகிறது.
ஆகவே நமது உணர்வு பூக்களால் அடுத்தவர் இதயங்களில் இனிய உணர்வு பூக்களை மலர செய்வோம். உலகம் என்னும் உன்னதமான கலைத் தோட்டத்தை கலைநயம் குறையாமல் காப்பதற்கு நம்மால் இயன்றதை செய்வோம்.

-தொடரும்-

Leave a Reply