‘வெளிநாட்டு வேலை’ என மோசடியில் ஈடுபட்ட இலங்கை அரசியல்வாதி கைது 

தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலங்கையர்களிடம் 20 இலட்சம் இல.ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் அம்பலாந்தோட்டை வேட்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

தாய்லாந்தில் உள்ள நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, இலங்கையர்கள் பலர் லாவோஸ் எனும் நாட்டுக்கு சுற்றுலா விசாக்களில் அழைத்துச் செல்லப்பட்டு நிர்கதியாக விடப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக பல புகார்களை இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பெற்றதை அடுத்து இக்கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதே சமயம், இக்கடத்தலில் சம்பந்தப்பட்ட முக்கிய நபராக அறியப்பட்ட அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பிரதேச சபை தேர்தலில் அம்பலாந்தோட்டை வேட்பாளராக போட்டியிட்ட அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் விசாரணைகளை தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்திலும் இலங்கை தொழிற்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மனுஷ நாணயக்கரா பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவிடம் சரணடைந்த அந்த அரசியல்வாதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.