ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே குடியுரிமைக் கோரிக்கையும் நிறைவேறட்டும்; முன்னாள் எம்.பி. திலகர்

456 Views

குடியுரிமைக் கோரிக்கையும் நிறைவேறட்டும்குடியுரிமைக் கோரிக்கையும் நிறைவேறட்டும்: தமிழ்நாட்டில் முப்பது ஆண்டு காலத்திற்கு மேலாக அகதி என்ற நிலையில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை அறிவித்துள்ளதுடன், அவர்களின் வாழ்விடங்களை மறுவாழ்வு முகாம் என மாற்றியிருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு அவரது ஆட்சிக் காலத்திலேயே அந்த மக்களின் குடியுரிமைக் கோரிக்கையும் நிறைவேறும் என ஆவல் கொண்டிருப்பதாக நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்து உள்ளார்.

தமிழ் நாட்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையில் இலங்கை அகதிகளுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை அறிவித்து அவற்றை மறுவாழ்வு முகாம் எனவும் மாற்றி அமைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் அகதிநிலையில் வாழும் மக்களின் மறுவாழ்வு, குடியுரிமை கோரிக்கைத் தொடர்பில் கடந்த பதின்மூன்று வருடங்களுக்கு மேலாக பேசியும், எழுதியும், செயற்பட்டும் வருபவன் என்ற வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது. முதல்வர் உள்ளிட்ட தி.மு.க தலைமையிலான அனைத்து ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களின் குடியுரிமைக் கோரிக்கைத் தொடர்பில் பல கள ஆய்வுகளையும், தமிழக அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகளையும், டெல்லியில் உயர் அதிகாரிகளுடனான சந்திப்புகளையும் நிகழ்த்தி உள்ளதோடு, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒவ்வொரு ஜனவரி மாதமும் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின விழாவில் கலந்து கொண்டு இந்த விடயம் குறித்து உரைகளை வழங்கி வந்துள்ளதுடன் ஊடக கவனத்தையும் ஈர்க்கும் பணியைச் செய்து வருபவன் என்ற வகையில் முதல்வரின் இந்த அறிவிப்பு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.

மறுவாழ்வுத் திட்டங்களுக்கு அப்பால் அந்த மக்களது குடியுரிமைக் கோரிக்கைத் தொடர்பிலும் இலங்கைக்கு திரும்புதல் தொடர்பிலும் கூட முதல்வர் ஸ்டாலின் கருத்துக்களைப் பகிர்த்துள்ளார். இலங்கைத் திரும்ப விரும்பும் யாரும் இலங்கை வரலாம் எனும் ஏற்பாடு 2009 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள போதும் கடந்த பத்து ஆண்டுகளில் (2019 வரை) 10009 (பத்தாயிரத்து ஒன்பது) பேர் மாத்திரமே இலங்கை திரும்பி உள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் மீள்குடியேற்றம் குறித்த முன்னேற்றம் தொடர்பில், கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகப் பிரதிநிதிகளுடனும் 2021 ஏப்ரல் மாதமளவில் நான் செய்த கலந்துரையாடல்களின்படி இந்தப் புள்ளிவிபரங்கள் உண்மையானவை என என்னால் உறுதி செய்ய முடியும். சென்னையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகப் பிரதிநிதிகளுடனும் மின்னஞ்சல் வழி தொடர்பாடலைச் செய்துள்ளேன்.

இந்தக் கலந்துரையாடல்கள் புள்ளி விபரங்களின்படி இந்திய முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் இலங்கை திரும்புவதில் போதிய விருப்பம் கொண்டவர்களாக இல்லை என்றே தெரியவருகிறது. குறிப்பாக முகாம்களில் வாழும் இலங்கை மலையக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் முப்பதினாயிரம் அளவான மக்கள் இலங்கை திரும்புவதில் எந்த நாட்டங்களையும், அதேநேரம் இலங்கையில் எந்த வாய்ப்புகளையும் கொண்டிருக்கவில்லை. இதற்கான காரணங்களை விரிவாக பல தளங்களில் தொடர்ச்சியாகப் பதிவு செய்துள்ளேன்.

அவர்கள் அகதியாக மட்டுமல்ல நாடற்றவர்களாகவும் உள்ளனர் எனும் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதே நியாயமானது என மதுரை உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கிய நிலையில் அவற்றை நடைமுறைப் படுத்முவதில் காலதாமதமும் வேறுகுளறுபடிகளும் நடைபெற்று வருகின்றமை துரதிஷ்டவசமானது.

இந்திய குடியுரிமை வழங்கும் பொறுப்பு தனியே தமிழ்நாட்டு அரசுடன் மாத்திரம் அல்லது மத்தியில் அமைந்துள்ள ஒன்றிய அரசுடனும் தொடர்பு உள்ளது என்றவகையில், இணக்கப்பாட்டுடன் எடுக்கப்பட வேண்டிய தீர்மானம் என்பதை அறிவோம். அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் குடியுரிமை வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பணிவுடன் முன்வைக்கின்றேன்.

மறுவாழ்வு திட்டத்தை அறிவித்த மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்.டாலின் அவர்களது ஆட்சிக் காலத்திலேயே குடியுரிமைக் கோரிக்கைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற எமது நம்பிக்கையை நிறைவேற்றி வைப்பீர்கள் எனவும் இலங்கை மலையகத் தமிழர்களின் பிரதிநிதியாக வேண்டுகிறேன். மேலும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், எமது கோரிக்கைகளை தொடர்ச்சியாக உள்வாங்கி இந்திய நாடாளுமன்றத்தில் எமது குரலாக ஒலிக்கச் செய்யும் இந்திய கம்யூனிஸ்ட் ( மார்சிஸ்ட்) கட்சி உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தை கட்சி உறுப்பினர்கள், இந்தக்கட்சிகளின் மூத்த தலைவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply