திருமலை – கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்திற்கு மீண்டும் பூட்டு!

கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்திற்கு
திருகோணமலை – கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாதவாறு பூட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொல்பொருள் அமைச்சு கோயிலை மூடுமாறு பணித்தமையால் தொல்பொருள் திணைக்களம் மூடி விட்டு தமக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை கன்னியா சிவன் ஆலயம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்பில் மேல் நீதிமன்றில் ஏற்கனவே வழக்கு இடம் பெற்று வருகின்றது. எனினும், ஆலயத்திற்கு சென்று வழிபடுவதற்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட தடைகள் நீக்கப் பட்டன. அத்துடன், தொடர்ந் தும் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இப் போது மீண்டும் ஆலயத்துக்கு தொல்பொருள் திணைக்களத்தினர் பூட்டுப் போட்டு மூடியுள்ளனர்.

இந்த விடயம் தொடர் பில், திருகோணமலை தமிழர் சமூகத்தின் இணைப்பாளர் ஆர். நிக்லஸ், செய்தியாளர்கள் மற்றும் புதிய உதயம் அமைப்பின் பிரதிநிதி யான எஸ்.பி ராஜூ உள்ளிட்டோர் நேற்று முன்தினம் அந்தப் பிரதேசத்துக்கு பொறுப்பான உப்பு வெளி பொலிஸ் பொறுப்பதிகாரியை சந்தித்து கேள்வி எழுப்பினர்.

இதன்போது, பொலிஸ் நிலையத்திற்கும், கோயில் மூடப்பட்டமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தொல்பொருள் அமைச்சினால் மூடுமாறு கூறப்பட்டதை அடுத்து தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மூடி தங்களுக்கு அறிவித்தல் வழங்கினர் என்று கூறினார்.

அத்துன், சிவன் கோயில் மூடப் பட்டமை தொடர்பில் எதுவித ஆவணங்களும் பொலிஸாருக்கு கிடைக்க வில்லை எனவும் நேற்றைய தினமே தொல்பொருள் திணைக்களத்தினரிடம் சிவன் கோயில் மூடப்பட்டமை தொடர் பான ஆவணங்களை பெற்றுத் தருவதாக வும் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார் என்று ஆர்.நிக்லஸ் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து தொல் பொருள் திணைக்களத்தின் திருகோண மலை பிராந்திய அதிகாரிகளிடம் வினவியபோது, இரண்டு நாட்களுக்குள் இதற்கான தீர்வு வழங்குவதாக உறுதியளித்தனர். இருந்தபோதிலும், ஆலயத்தை மூடியமைக்கான சரியான காரணங்களை அவர்கள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News