இந்தியாவுடன் பல உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ளதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டிற்கு துரோகமிழைத்துள்ளது என சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தெரிவித்திருப்பதை ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா நிராகரித்துள்ளார்.
இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்தில் ஏதாவது உடன்படிக்கையில் அரசாங்கம் கைசாத்திட்டுள்ளதா? என்பதை எதிர்க்கட்சிகள் நிரூபிக்க வேண்டும் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய விஜயத்தின் போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை உடனடியாக பொதுமக்களிற்கு அரசாங்கம் பகிரங்கப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ள அவர் இந்த உடன்படிக்கைகள் இரண்டு நாட்டிற்கும் நன்மை பயக்ககூடியவை என தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இந்தியாவின் பல திட்டங்களிற்கு ஜே.வி.பி எதிர்ப்பு வெளியிட்டதை ஏற்றுக்கொண்டுள்ள அவர் ‘இந்திய இராணுவம் இலங்கைக்கு வருவதற்கு காரணமான இந்திய – இலங்கை ஒப்பந்தம் நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்பதால் அதற்கு எதிராக ஜே.வி.பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது’ என்று தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோம், இந்தியா தற்போது மாறிவிட்டது, உலகமும் மாறிவிட்டது’ என தெரிவித்துள்ள ரில்வின் சில்வா ‘1987இல் நாங்கள் எதிர்த்ததால் அந்த கோபத்தை கைவிடாமல் தொடர்ந்தும் அதே மனோநிலையில் இருக்கவேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.