மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், வட மாகாணத்தில் போதைப்பொருளை பரப்புவதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளில் போதைப்பொருள் பூச்சிய பாவனையில் இருந்தது.
அவர்கள் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இயங்கியதால் இது சாத்தியமானது.
குறித்த காலப்பகுதியில் வடக்கில் அரச கட்டுப்பாட்டு பகுதிகளிலும் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் இருந்தமையினால் அங்கு போதை அச்சுறுத்தல் குறைந்த அளவிலேயே இருந்தது.
எவ்வாறாயினும், போர் மௌனிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டுக்கு பின்னரே வடக்கில் பாரியளவில் போதைப்பொருள் பரவல் தொடங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இராணுவத்தினரே இந்த நடவடிக்கையில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று சில பகுதிகளில் சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் இடமாக இராணுவ முகாம் மாறியுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டினார்.
விடுதலைப்புலிகளின் புரட்சியை தோற்கடிப்பதற்கு இராணுவத்தின் ஊடாக பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் என்ற புற்றுநோய் இன்று தெற்கு வரை பரவியுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான முறைப்பாடுகளையும் பொலிஸ் நிலையங்கள் ஏற்க மறுகின்றன.
எனவே, போதைப்பொருள் பரவலில் இராணுவத்துக்கு உள்ள தொடர்பு குறித்து தேடிப்பார்க்க வேண்டும்.
பொலிஸ், கல்வி, சுகாதார போன்ற சமூகத்துக்கு மிகவும் தேவைப்படும் விடயத்தை அந்ததந்த மக்களிடமே விடவேண்டும். அப்போதுதான் தங்களது மக்களுக்கு தாம் பொறுப்பானர்கள் என்ற உணர்வு ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.



