இனஅழிப்புக்கு நாம் உள்ளாக்கப்பட்டதாக நிறுவப்பட்டாலே நீதி கிடைக்கும்

இனஅழிப்பு

இலக்கு மின்னிதழ் 148 இற்கான ஆசிரியர் தலையங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட்டின்  இலங்கை குறித்த வாய்மொழி அறிக்கை, ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாகி, 12 ஆண்டாகியும் ஐக்கிய நாடுகள் சபையினால் அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைய, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு இன்னமும் நீதி வழங்க இயலாதுள்ளது என்ற உண்மையை மீளவும் தெளிவாக்கியுள்ளது. இனஅழிப்புக்கு நாம் உள்ளாக்கப்பட்டதாக நிறுவப்பட்டாலே நீதி கிடைக்கும்.

இதற்குக் காரணம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் நோக்கம், சிறிலங்காவை அனைத்துலக முறைமைக்குள் கொண்டு வருதல் என்பதாகவே இருப்பதாகும்.

உலக மக்கள் இனங்களில் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட ஈழத்தமிழினம் இனஅழிப்புக்கு உள்ளாகி வருகிறது என்ற வகையில், அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைவான நீதி விசாரணையைச் சிறிலங்கா அரசாங்கத்தின் மேல் தொடங்க இதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் முயற்சிக்கவில்லை.

இதனை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு நீதியரசர் சி. விக்னேஸ்வரன் அவர்களின், ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை குறித்த பின்வரும் விளக்கம் தெளிவாக்கியுள்ளது. அவர் :-

  1. சிறிலங்கா அசராங்கம் தனது குடிகளையே வேவு பார்க்கும், அச்சுறுத்தும் அரசாங்கமாக உள்ளது.
  2. மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப் பட்டமைக்குச் சாட்சியங்களாக விளங்கக் கூடிய வலிந்து காணாமாலாக்கப் பட்டோரின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரைக் குறிவைத்து, தனது சட்டங்களின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்துகிறது.
  3. நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் என்பவை வெறும் வார்த்தைகளாகப் பேசப்படுகிறதே தவிர, செயற்படுத்தப்படவில்லை.
  4. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தற்காலிகமாகவேனும் செயலிழக்க வைக்க வேண்டும்.
  5. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான குற்றவாளிகளைக் கண்டறிந்து, உண்மையையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும். என்பனவற்றை அறிக்கை பேசியுள்ளது.

ஆனால் ஈழத்தமிழர்களுடைய காணிகளைச் சிறிலங்கா அபகரிப்பது முதலாக, அவர்களது முக்கிய பிரச்சினைகள் பலவற்றைப் பற்றி பேசவில்லை. மாறாக அரசாங்கம் தான் மனித உரிமைகளை மேம்படுத்தச் செய்து வருவதாகக் கூறிய விடயங்களைப் பாராட்டி, அனைத்துலகச் சட்ட முறைமைகளுக்குள் அரசாங்கத்தைக் கொண்டு வரவே முயற்சித்துள்ளது எனத் தெளிவாக விளக்கியுள்ளார்.

கூடவே ஆணையாளர் அரசாங்கம் செய்ய வெண்டுமென விரும்புவதையும் விளக்கி, வாய்மொழி அறிக்கையினை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அறிக்கையாகவே ஆணையாளர் அமைத்துள்ளாரே தவிர, அதீத மனிதாய தேவைகளில் உள்ள ஈழத்தமிழ் மக்களைக் குறித்தோ அல்லது 2009ஆம் ஆண்டு சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பால் பாதிப்புற்ற ஈழத்தமிழ் மக்களுக்கான நீதி பற்றியோ, புனர்வாழ்வு புனரமைப்புப் பற்றியோ எதுவுமே குறிப்பிடவில்லை.

இதற்கான மூலகாரணம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம், இதுவரை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு உட்பட்ட 1956ஆம் ஆண்டு முதலான இன்று வரையான 65 ஆண்டுகாலச் சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்புச் செயல்கள் எதனையும் ‘இனஅழிப்பு’ என்னும் வகைமைக்குள் கருத்தளவில் தன்னிலும் ஏற்கவில்லை.

ஆணையகத்தின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்னும் அதன் பொறுப்புக்கு எதிரான இந்தச் செயற்பாட்டைத் தட்டிக் கேட்டு, சரிப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள  ஆணையகத்துடன், தொடர்பு கொள்ளும் ஈழத் தமிழர்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தாங்களே இனஅழிப்புத்தான் ஈழமக்களுக்கு நடந்தது என்பதை உறுதியுடன் எடுத்துச் சொல்ல மறுக்கின்றனர். அவ்வாறு இறுதியும் உறுதியுமாகச் சொன்னால், தாங்கள் உலக நாடுகளுடனும், உலக அமைப்புக்களுடனும் உறவாடுவதில் பின்னடைவுகள் வரும் என்பதே இவர்களின் அச்ச உணர்வாகத் தொடர்கிறது. ஈழத்தமிழர்கள் இனஅழிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தவதில் வரக்கூடிய சவால்களை எதிர்கொண்டு, போராடும் உள்ள உறுதி இவர்களுக்கு இல்லாதிருக்கிறது.

தாம் சார்ந்து நிற்கும் சில மனித உரிமைகள் அமைப்புக்கள் வழி அவைகள் எவ்வாறு எதனை அறிக்கையாகத் தயாரித்துத் தரும்படி கேட்கிறார்களோ, அவ்வாறு செய்து விட்டுத் தாங்கள் நிலைமாற்று நீதிக்கும், மனித உரிமைகள் பேணலுக்கும் உழைப்பதாகக் கடந்த பன்னிரு ஆண்டுகளாக இவ்வாண்டு உட்பட பெருமை பேசி வருகின்றனர்.  ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகள் எனத் தங்களைக் காண்பிப்பதில் போட்டியிடுபவர்களோ, புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை விடப்படுமோசமாக உள்ளனர்.  எப்படிக் கடிதம் அனுப்புவது என்னும் அளவுக்கு ஒருமைப்பாடும், ஒரு குரலுமற்றவர்களாகக் குழம்பியதை உலகு தெளிவாக உணர்ந்து கொண்டது.

ஆனால்  சிறிலங்கா அரசாங்கமோ தனது வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ்  மூலம் கடந்த மார்ச் மாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் 46/1 தீர்மானத்தினை நிராகரித்து, எந்தவொரு வெளியக முன்மொழிவுக்கான முயற்சிகளையும் தாங்கள் ஏற்கப்போவதில்லையென வெளிப்படையாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்குத் தெரியப்படுத்தியுள்ளது. கூடவே சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கை என்பது, அனைத்துலகத்தின் தவறுகளைத் திருத்துவது என சிறிலங்கா வெளிவிவகாரச் செயலாளர் கமகே தெளிவாக விளக்கியுள்ளார். அனைத்துலகின் தவறுகளைத் திருத்தும் நோக்கில் சிறிலங்காவின் அரச தலைவர் கோத்தபாய ராஜபக்ச தனது மதியுரைஞர்களுடன் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற, ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்குச் சென்றுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாயகத்தில் சிறிலங்காவால் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வரும் இனமாக ஈழத்தமிழர்கள் உள்ளனர் என்பதை புலம்பதிந்து வாழும் தமிழர்கள் துணிவுடனும், உறுதியுடனும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துக் கூறி நிறுவாது விட்டால், பாதிப்புற்ற ஈழத்தமிழர்களுக்கான நீதியை ஐக்கிய நாடுகள் சபை என்றுமே வழங்காது என்பதே இலக்கின் கருத்தாக உள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021