மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம்  படுகொலையில் மறைக்கப்படும் நீதி -பா.அரியநேத்திரன்

இன்று (25/12/2022) மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம்  படுகொலை இடம்பெற்று 17, வது நினைவு நாள்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு 2001.ல் உருவாக்கப்பட்டாலும் 2004,ஏப்ரல்,04,ல் இடம்பெற்ற பொதுத்தேர்தல் என்பது வரலாற்றில் முதல்தடவையாக வடக்கு கிழக்கில் இருந்து 633,654 வாக்குகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்று 22, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட ஒரு தேர்தலாகும்.

2004, பெப்ரவரி,06,ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மறுநாள் வேட்பு மனு கோரல் அறிவிப்பு விடுக்கப்பட்டு சகல மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜோசப்பரராசசிங்கம் தலைமையில் வேட்பாளர் பட்டியலை தயாரித்து நானும்(பா.அரியநேத்திரன்) ஜோசப்பரராசசிங்கம் அவர்களும் மட்டக்களப்பு கச்சேரியில் வேட்பு மனுவை கையளித்தோம்.

அதன்பின்னர் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்து கூட்டங்களையும், தனித்தனியாக வேட்பாளர்கள் பிரசாரங்களையும் மேற்கொண்டு வரும்நிலையில் விடுதலைப்புலிகளில் இருந்து மட்டக்களப்புக்கு பொறுப்பாக இருந்த கருணா என்பவர் பிரிந்ததாக 2004,மார்ச்,02, ல் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டு அதை  ஊடகங்களில் கொடுத்ததால் “கருணா அம்மான் புலிகளில் இருந்து பிரிந்து விட்டார்” என தலைப்புச்செய்திகள் மறுநாள் 2004, மார்ச்,03, ல் பரபரப்பாக வெளிவந்தன. வடக்கு கிழக்கு முழுவதும் பலத்த குழப்பம் தமிழ்மக்கள் மத்தியில் பீதியும் சந்தேகமும் தேர்தல் பிரசார வேலைகளிலும் அச்சம் என தொடர்கிறது.

இதன்பின்னர் விடுதலைப்புலிகளுடைய அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வனால் வழங்கப்பட்ட அறிக்கை 2004,மார்ச்,06,ல் விடுதலைப்புலிகளில் இருந்து கருணா நீக்கப்பட்டார் என்ற செய்தி அன்று இரவு வானொலிகளில் கூறப்படுகிறது.

இந்த பரபபரப்புகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் மட்டக்களப்பு கத்தோலிக்க ஆயர் கிஷ்லி சுவாம்பிள்ளை தலைமையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எட்டு வேட்பாளர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் சாள்ஷ்மண்டபத்தில் விசேட கூட்டம் ஒன்று 2004, மார்ச்,08, ல் கூட்டப்பட்டு இந்த விடயம் தொடர்பாக ஆராயப்படுகின்றது.

பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் இப்படி விடுதலைப்புலிகளுக்குள் பிழவு ஏற்பட்டது துயரமான சம்பவம் எனவும் மீண்டும் கருணாவை விடுதலைப்புலிகளுடன் இணைத்து செயல்படவைக்கவேண்டும் என சிலர் கூறுகின்றனர், இன்னும் சிலர் சமரசமாக இரு சாராரும் இணங்க வைப்பதற்கு சாதகமாக என்னசெய்யலாம் என கூறுகின்றனர் பின்னர் ஒரு குழு வன்னிக்கு சென்று தலைமைகளுடன் பேசி உண்மை நிலவரங்களை அறிவது எனவும்  முடிவு எடுக்கின்றனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் 2004, மார்ச்,10, ல் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எட்டு வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யும் பிரசாரக்கூட்டம் இடம்பெறுகிறது அந்தக்கூட்டத்தில் உரையாற்றிய தலைமை வேட்பாளரான ஜோசப்பரராசசிங்கம் அவர்கள்

“ தற்போது விடுதலைப்புலிகளுக்குள் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டு கருணா அம்மான் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது அதை நான் நம்பவில்லை எனது வலது கண்ணாக தலைவர் பிரபாகரனையும் இடது கண்ணாக கருணா அம்மானையும் நான் பார்கிறேன் இரட்டை குழல் துப்பாக்கியாகவே தலைவர் பிரபாகரனும் கருணாவும் உள்ளனர் அப்படி அவர்கள் பிரிவதற்கு வாய்பில்லை”

இவ்வாறு ஜோசப்பரராசசிங்கம் பேசியபோது கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். அதனை தொடர்ந்து ஏனைய வேட்பாளர்களும் கருணா பிரிவு பற்றி ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்த பின்னர் மறுநாளில் இருந்து பிரசாரங்களை முன்எடுக்கின்றனர்.    மட்டக்களப்பில் இருந்து வன்னிக்கு  தப்பிச்சென்ற கௌசல்யன், ரமேஷ், றமணன் ஆகிய மூவரும் கிளிநொச்சியில் வைத்து கருணா விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த விடயத்தையும் கருணா நியாயப்படுத்திய பொய் விடயங்களையும் ஆதாரத்தோடு ஊடக மகாநாடு நடத்தி கருணா விட்ட பிழைகளை கூறுகின்ற VDO காட்சி தொலைக்காட்சிகளில் காட்டப்படுகிறது.

நான்(பா.அரியநேத்திரன்) வேட்பாளராக நியமிக்கப்பட்டாலும் கொக்கட்டிச்சோலையில் இருந்து வெளிவரும் “தமிழ் அலை” பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன், பிரதம ஆசிரியராக வந்தாறுமூலையை சேர்ந்த வேணுகோபால் இருந்தார்.

வன்னியில் சென்ற விடுதலைப்புலிகள் கருணாவுக்கு எதிராக பேட்டி கொடுத்ததை அறிந்த மட்டக்களப்பில் இருந்த கருணாக்குழு உறுப்பினர் ஒருவர் எனது (அம்பிளாந்துறை) வீட்டுக்கு இரவு 7, மணியளவில் வந்து “அண்ணன் உங்களை தமிழ் அலை காரியாலயத்திற்கு வரட்டுமாம் என றாபட் அண்ணரும் விசு அண்ணரும் கூறினார்கள் உடனே வாருங்கள்” என கூறிவிட்டு சென்றான்.

நான் அங்கு இரவு 8, மணிக்கு சென்ற போது பலர் சீருடையில் கருணா குழு உறுப்பினர்கள் உள்ளனர் பிரதம ஆசிரியர் வேணுகோபால்இருக்கைக்கு முன் சீருடையுடன் கருணா குழுவை சேர்ந்த ராபட்,விசு,துரை ஆகிய மூவரும் இருக்கையில் இருந்தனர் என்னை அமரும்படி பக்கத்தில் ஒரு கதிரையை தந்தனர் பின்னர் விசு கூறினார்” அண்ணர் வன்னிப்புலிகளுடன் துரோகிகள் ரமேஷ், றமணன், கௌசல்யன் சேர்ந்து கருணா அம்மானை தவறாக கூறி ஊடகசந்திப்பு நடத்தியுள்ளனர் இதற்கு எதிராக நீங்கள் நாளைய “தமிழ் அலை” பத்திரிகையில் தலைப்புச்செய்தியாக “துரோகிகளான ரமேஷ் றமணன், கௌசல்யன் கருணா அம்மனை பற்றி பொய்கூறுகிறார்கள் வேட்பாளர் அரியம் தெரிவிப்பு” என்று ஒரு செய்தி உங்கள் படத்துடன் வெளிவரவேண்டும் அதற்குத்தான் உங்களை வரச்சொன்னோம் என்றார்.

நான் சடார் என சொன்னேன் இப்படி ஒரு செய்தி நான் போடமாட்டேன் யார் துரோகி யார் தியாகி என்பதெல்லாம் எனக்கு தெரியாது “ நீங்கள் விடுதலைப்புலிகளில் இருந்து விலகியதற்காக வன்னியில் சென்றவர்கள் எல்லாம் துரோகி என கூற எனக்கு எந்த தகுதியும் இல்லை இது ஒரு விடுதலை இயக்க உள்முரண்பாடு வெளியில் இருந்து நான் இதைகூற முடியாது” என்றேன். உடனே துரை என்பவர் “இந்த செய்தி போடாவிட்டால் அண்ணன் நீங்கள் வேட்பாளராக போட்டிபோட முடியாது விலகிவிடுங்கள்” என்ரார்.

நான் நிதானமாக கூறினேன் இது நல்ல முடிவு சரி அப்படி எனில் நாளைய தமிழ் அலை பத்திரிகையில் தலைப்பு செய்தியாக “மட்டக்களப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பில் முதலாம் இலக்க வேட்பாளர் அரியநேத்திரன் வேட்பாளரில் இருந்து விலகினார்”இப்படி தலைப்பை போடுகிறேன் எனறேன்.

விசு என்பவர் அப்படி அதைப்போடவேண்டாம் வேட்பாளரை விட்டு விலகவேண்டாம் ஆனால் நீங்கள் வன்னிப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் பாதிப்பை சந்திப்பீர்கள் என்ரார். சரி என கூறி வீடுசென்றேன்.ஆனால் ராபட் எதுவுமே பேசவில்லை.

மறுநாள் மட்டக்களப்பு நகரில் சுபராஜ் படமாளிகை அண்டிய இடத்தில்தான் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்கள் இல்லம் இருந்தது அங்கு சென்ற கருணாகுழுவை சேர்ந்த சிலர் ஜோசப்பரராசசிங்கத்திடம் நீங்கள் எந்த இடத்திலும் தேர்தல் பிரசாரங்கள செய்யக்கூடாது துண்டுப்பிரசுரங்களையும் வினியோகிக்ககூடாது வீட்டை விட்டு வெளியேறக்கூடாது உங்கள் ஆதரவாளருக்கும் இதனை சொல்லுங்கள் என எச்சரித்து சென்றதாக அறியமுடிந்தது.

இந்த எச்சரிக்கை காரணமாக செயவதறியாது ஜோசப்பரராசசிங்கம் மனைவி சுகுணம் அக்கா இருவரும்  வீட்டுக்காவலில் இருப்பது போன்று இருந்தனர் ஆதரவாளர்களும் பயத்தால் அவரின் வீட்டுக்கு செல்லவில்லை தேர்தல் பிரசாரத்தை முழுமையாக அவர் நிறுத்திவிட்டார். ஏனைய ஏழுபேர் நான் உட்பட பிரசாரம் செய்தாலும் பல கெடுபிடிகள் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன.

2004,ஏப்ரல்,2,ல் தேர்தல் இடம்பெற்று முடிவுகள் வெளியான பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு இரண்டு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்தது அந்த இடத்தில் ஒருவராக ஜோசப்பரராசசிங்கம் நியமனம் பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார் அவருடன் இணைந்து முதன்முதலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள்(ஜோசப்பரராசசிங்கம்,கனகசபை, தங்கேஷ்வரி, ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன்) தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்றம் செல்லப்பட்டனர்.

ஜோசப்பரராசசிங்கம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி சரியாக ஒருவருடம் எட்டுமாதங்களால் நத்தார் நன்நாள் 2005, டிசம்பர்,25 இரவில் மட்டக்களப்பு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு திருப்பலிப் பூசையின் போது தமிழ் ஆயுத ஒட்டுக்குழு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சுடப்படும்போது பக்கத்தில் இருந்த அவரின் மனைவி சுகுணம் அக்கா படுகாயம் அடைந்தார். அவரின் புகழுடல் மட்டக்களப்பில் இருந்து வன்னிக்கு கொண்டுசெல்லப்பட்டு கிளிநொச்சியில் வைத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரடியாக அஞ்சலி செலுத்தியதுடன் மாமனிதர் என்ற கௌரவமும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாமனிதர் அமரர் ஜோசப்பரராசசிங்கம் அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர், தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவி பெயரில் (சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர இவர் எழுதிய கட்டுரைகள் பல அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானவை.   மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் எனும் பெயரில் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதிலும் முன்னின்றவர் இவர். அந்த அமைப்பின் ஆரம்பத் தலைவரும் இவரே.அவரால் ஆரம்பித்த கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்தான் 2001, ல் தமிழ்தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கு உறுதுணையாக செயல்பட்டவர்கள் என்பது வேறு கதை. 1989இல் பல தமிழ் அமைப்புகள் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலில் தேர்தலில் போட்டியிட்ட சமயம் இவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றார். ஆயினும் அப்போது அவர் அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால்  தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாம் தம்பிமுத்து, கொழும்பில் கனடியத் தூதரகத்துக்கு முன்பாக வைத்து தனது மனைவியார் கலா தம்பிமுத்து சகிதம் சுட்டுக்கொல்லப்படவே, அந்த இடத்து நாடாளுமன்ற உறுப்பினராக ஜோசப் நியமிக்கப்பட்டார்.

அதனை அடுத்த 1994 தேர்தல்களில் ஜோசப் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த போதிலும், வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் காரணமாக கடந்த பொதுத் தேர்தலில் அவர் தோல்வியடைய நேர்ந்தது. ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக்கட்சி) சார்பில் தேசியப் பட்டியல் மூலமான உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார்

மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் கொலை செய்யப்பட்டு அது தொடர்பாக பத்து வருடங்கள் கடந்து சந்தேகத்தில் பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், தற்போதய இராஜாங்க அமைச்சர் சிவனேசததுரை சந்திரகாந்தனை 2015, ஒக்டோபர்,10, ம் திகதி கைது செய்யப்பட்டு 2015, நவம்பர்,4 ஆம் திகதி வரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பின்கீழ் வைத்திருப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அப்போது  அனுமதி வழங்கிய நிலையில் சந்தேகநபரை 90 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் டி.டபிள்யூ.ஆர்.டி. செனவிரத்ன நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, சிவனேசத்துரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைத்திருக்க  நீதவான் உத்தரவிட்டார். அதன்பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட  ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 24.11.2020 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த பின்னர் , கடந்த 2021, ஜனவரி,13 அன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

இன்று 2020, டிசம்பர்,25 மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலை இடம்பெற்று 17, வருடங்கள் கடந்தபோதும் இதுவரை அவரின் கொலை தொடர்பாக குற்றவாளிகளோ சூத்திரதாரிகளோ கண்டறிந்து தண்டனை வழங்கப்படவில்லை என்பது இலங்கையில் நீதித்துறையின் வரலாறு இதற்காகவே தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேசத்தை நோக்கி கேட்கின்றனர் என்பதே உண்மை.

-பா.அரியநேத்திரன்-