ஈழத்தமிழர் இறைமை பேசப்படாவிடின் அடிமைத்தனமே தீர்வு | இலக்கு இதழ் 214

242 Views

ஈழத்தமிழர் இறைமை பேசப்படாவிடின் அடிமைத்தனமே தீர்வு

சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறிலங்காவின் 75வது சுதந்திரதினம் பெப்ரவரி 4ம் திகதி இடம்பெறுவதற்கு முன்பதாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிபந்தனையற்ற பேச்சுக்களை நடாத்தி தனது சிறிலங்கா அரசாங்கம் சார்பான தீர்வினை முன்வைக்கும் முயற்சியில் 2023ம் ஆண்டு பிறந்தவுடனேயே சனவரி 10 முதல் 14 வரை சிறிலங்காவின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் பேச்சுக்களை நடத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். ரணிலுக்கு உறுதியான அரசாகத் தன் ஆட்சியை வெளிப்படுத்துதல் என்பது, கடன்களை மறுசீரமைக்கவும், அந்த கடன் மறுசீரமைப்பின் மூலம் புதிய கடன்களைப் பெற்று நாளாந்த வாழ்வை முன்னெடுக்கவும் இன்றியமையாத தேவையாக உள்ளது. இந்த பொருளாதாரத்தை மீள்அமைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் இன்றைய தேவைக்கு ஒன்று சீனாவும் இந்தியாவும் கடன்மறுசீரமைப்புக்கு சம்மதம் தெரிவிக்க வைப்பதும் இரண்டு இன்றைய அரசாங்கம் உறுதியான அரசாங்கம் என்பதை வெளிப்படுத்துவதும் தவிர்க்க முடியாத உடன் தேவையாக உள்ளது. முன்னாள் அரசத்தலைவர் கோத்தபாய ராசபக்சாவினால் நியமிக்கப்பட்ட அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா மக்களாணையற்ற அரசத்தலைவர் ராசபக்ச குடும்பத்தினரின் மொட்டுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பலமின்றி ஒரு சிறு விடயத்தைக் கூட சட்டவாக்கம் செய்ய இயலாதவர். வேறு மொழியில் கூறுவதானால் சிங்கள இனவெறியையும் பௌத்த மதவெறியையும் வளர்க்கும் மகிந்த சிந்தனையையும் கோத்தபாயாவின் நாட்டின் பொருளாதாரத்தைத் தன் வீட்டுப் பணப்பொட்டிக்குள் சுருட்டிய சுரண்டல் பொருளாதார முறையையும், ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் சட்டத்தின் ஆட்சியைச் சிங்கள பௌத்தர்களுக்கே உரியதாக்கி ஈழத்தமிழினத்தை இனஅழிப்பு செய்யும் தொடர் அரசியற்கொள்கைகள் கோட்பாடுகளையும் நடைமுறைப்படுத்தும் பினாமித் தலைமையாக இன்றைய சிறிலங்கா அரசதலைவர் உள்ளார்.இதனாலேயே கோத்தபாய ராசபக்சா இவரே சிறந்த தலைவர் என்று நாவாரப் புகழ்பாடி வருகிறார்.
இந்நிலையில் இவரால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஈழத்தமிழர்களின் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசி அவர்களுடைய சம்மதத்தின் பெயரிலேயே புதிய அரசியலமைப்பை ஒரே நாடு ஒரே சட்டமாக உலகுக்கு வெளிப்படுத்துதல் என்ற ராஜதந்திர முயற்சியாக உள்ளது. இதனை நல்ல சந்தர்ப்பம் என்றும் இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் இனி என்றுமே இத்தகைய சந்தர்ப்பம் எறபடாது என்றும் பக்திக்கீதம் பாடிக்கொண்டு சம்பந்தர் ஐயாவும் அவரின் சிறிலங்காப் பாராளுமன்றக் கூட்டணியினரும் சால்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு ரணில் விக்கிரமசிங்காவின் முன் மண்டியிட்டு நிற்கின்றனர். தன்னுடைய படைபல ஆட்சி வழி தான் நடாத்தும் சிறிசேனா காலம் முதல் இன்று வரையான இந்த இனப்பிரச்சினைத் தீர்வு என்னும் அந்த நாடகத்தை இந்த மேடையில் மீண்டும் மேடையேற்றும் தலைசிறந்த அரசியல் நாடக இயக்குனராக ரணில் விக்கிரம சிங்கா திகழ்ந்து கொண்டிருக்கிறார். முட்டையை விட்டுப் பறவை வந்து திருதிருவென்று விழிப்பது போல ஏதோ இப்போதுதான் தங்களுக்கு இதுவெல்லாம் தெரியவருவது போல சிறிலங்காத் தமிழ்ப்பராளுமன்ற உறுப்பினர்களும் உலகையும் ஈழத்தமிழர்களையும் ஏமாற்றிக் கொண்டு 7 வருடங்களாக சிறிலங்காவுடன் தாங்கள் வளர்த்தெடுத்த புதிய அரசியலமைப்புக்குச் சட்டவலுவளிக்கும் சாதனையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்தச் சிறிலங்காப் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களிடம் ஒரே ஒரு கேள்வி ஈழத்தமிழரின் தேசியப்பிரச்சினை என்பது இனப்பிரச்சினையா இறைமைப்பிரச்சினையா? நூற்றிநாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களை முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா 2009 இல் இனஅழிப்புச் செய்தது இனப்பிரச்சினையைத் தீர்க்கவா? இறைமைப்பிரச்சினையை வெல்லவா? சட்டமாமேதைகளாகவும் நீதித்தலைமைகளாகவும் புத்தகப் பூச்சிகளாக உள்ள பெரியார்கள் நீங்கள் உள்ளக தன்னாட்சி உரிமையைச் சிறிலங்கா முற்றாக மறுத்ததின் விளைவுதான் அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப ஈழத்தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கும் தங்களின் பிரிக்கப்பட முடியாத அடிப்படை மனித உரிமையை மீள்நிலைப்படுத்தத், தங்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் உலகஅமைப்புக்களையும் உலகநாடுகளையும் அவர்களின் அனைத்துலக சட்டமுறைமைகளின் அடிப்படையில் தங்களுடைய தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவுமாறு கோரிவருகிறார்கள் என்பது உங்கள் சட்டப்புத்தக அறிவில் உங்களுக்கு ஏன் நினைவுக்கு வருவதாகவில்லை. இதில் ஏதாயினும் சட்ட மீள்நினைவூட்டல் தேவையாக இருந்தால் சட்டத்துறையில் உங்களில் வயதுக்கு இளையவரான கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்களிடம் கேளுங்கள் அவர் தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதனாக உங்களுக்கு உபதேசம் செய்வார். அது உங்களுக்கு வெட்கமாக இருந்தால் அவரின் தாத்தா சட்டமாமேதை ஈழத்தமிழர்களின் முன்னாள் தலைமை அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் 1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் நாள் பிரித்தானிய காலனித்துவச் செயலாளர் ஹோல் அவர்களுக்கு “தமிழ்ச் சிறுபான்மையினர் வழக்கு” என்ற பெயரில் தாக்கல் செய்த ஆவணத்தைப் படியுங்கள். அதில் இலங்கைத் தமிழர்களின் இறைமை எவ்வாறு சிங்கள அரச உருவாக்கங்களுக்கும் சிங்கள அரசர்களுக்கும் கூட சகோதரத்துவ முறையில் அவர்களின் இறைமை நிலைக்க உதவியுள்ளது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதனால் தான் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் காலி முதல் காங்கேசன்துறை வரை ஈழத்தமிழர்களுக்கும் இறைமைச் சமத்துவம் உள்ளதென்ற அடிப்படையில் 50க்கு 50 கோரிக்கையை முன்வைத்தார். இன்னும் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசின் 1946ம் ஆண்டுச் செயலாளர் சட்டத்தரணி எஸ் சுப்பிரமணியம் அவர்கள் அக்கால பிரித்தானியப் பிரதமர் அட்லி அவர்களுக்கு 15.01. 1946 ம் திகதி அன்று அனுப்பிய “இலங்கைக்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு” என்ற தலைப்பிலான கோரிக்கையை படித்துப் பாருங்கள். அதில் அவர் சிறிய தேச இனங்களின் தன்னாட்சியை உலகளவில் அங்கீகரித்த தொழிற்கட்சியை சிறிய தேசஇனமான இலங்கைத் தமிழரின் தன்னாட்சியையும் அங்கீகரிக்குமாறு கேட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 1944ம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி திருகோணமலையில் பிரித்தானியக் கடற்படை மருத்துவராக இருந்த தமிழகத்தின் தென்ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ் பொன்னையா அவர்கள் “தமிழ் இலங்கைகக்கும் மிகுதியான இலங்கைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள்” என்ற தலைப்பில் அக்கால பிரித்தானியக் காலனித்துவச் செயலாளருக்கு அனுப்பி வைத்த கோரிக்கையில் இலங்கைத் தமிழரைத் தனியான அரசியல் அலகாக அவர்களுக்கான ஆட்சியை வழங்குமாறு எவ்வளவு அழகாக வாதிட்டுள்ளார் என்பதைப் படித்துப் பாருங்கள். அப்பொழுது இலக்கு “ஈழத் தமிழர் இறைமை பேசப்படாவிடின் அடிமைத்தனமே தீர்வு” என்பதை ஏன் வலியுறுத்துகின்றது என்பது புரியும். முன்னாள் மாகாணசபைத் தலைவர் நீதியரசர் மாண்பமை விக்கினேஸ்வரன் அவர்கள் எரிக்சொல்கைம்மை அனைத்துலக அரசியல் காலநிலைக்கான தனது ஆலோசகராக ரணில் நியமித்து இன்று பேச்சுவார்த்தைக்கான அனுசரணையாளராக ஏற்பாடு செய்வதாக இருந்தால் இந்தியாவுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அனைத்துலக தலைமையில் பேச்சுக்கள் நடைபெற வேண்டுமென்று கோரியுள்ளார். இவை எல்லாமே ஈழத்தமிழரின் இறைமை பேச்சுக்கான முன்நிபந்தனையாக்கப்படாவிட்டால், எந்த அனைத்துலகச் சட்டத்தின் கீழ் சிறிலங்காவின் இறைமையை மீறி நடைமுறைப்படுத்தப்படலாம் என்பதே இலக்கின் இன்றைய கேள்வி. இறைமை கோரிக்கை பிரிவினைவாதமல்ல. வாழ்வதற்கான அடிப்படை மனித உரிமைத் தேவை. ஈழத்தமிழ் மக்கள் தங்கள் இறைமையைத் தாங்களே காக்கத் தாயகத்திலும் உலகிலும் அணி திரள இலக்கு அழைக்கிறது.

Tamil News

Leave a Reply