கையிலிருந்த அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன்

அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன்அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில்  கடந்த வியாழக்கிழமை (23.06.2022) இடம்பெற்ற தொழிற்றுறை நிறைவேற்றதிகாரி களுடனான சந்திப்பின் போது, அவர் எங்கு நிற்க வேண்டும்,  என்ன செய்ய வேண்டும் என்பன தொடர்பில் அவருக்கு ஞாபகப்படுத்தும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடதாசிக் குறிப்பை  அவர் தவறுதலாக புகைப்படக்கருவிகளுக்கு காண்பித்து அந்தக் குறிப்பிலுள்ளவற்றை அம்பலப்படுத்தியுள்ளார். 

அந்த துண்டுக் குறிப்பில் நீங்கள் வெள்ளை மாளிகையிலுள்ள ரூஸ்வெல்ட் அறையில்  பிரவேசித்து  கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு  வந்தனம் கூறுங்கள், உங்கள் ஆசனத்தில் அமருங்கள், ஊடகவியலாளர்கள் பிரவேசம், சுருக்கமான விமர்சனம், ஊடகவியலாளர்கள் வெளியேறுதல்,  அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் குறிப்பிட்ட  நிறுவனத் தலைவரிடம் கேள்வியொன்றைக் கேளுங்கள், புறப்படுவதற்கு முன்னர் நன்றி கூறுங்கள் போன்ற அறிவுறுத்தல்கள்  அச்சிடப்பட்டிருந்தன.

அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன்

இவ்வாறு  ஜோ பைடன் (79 வயது)  தனக்கு வழங்கப்பட்ட துண்டுக் குறிப்பை  புகைப்படக் கருவிகளுக்கு காண்பித்து பரிகசிப்புக்குள்ளாவது  இது முதல் தடவையல்ல.  இந்த வருட ஆரம்பத்தில்  உக்ரைன் தொடர்பில் ஆற்றிய உரையின் போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையில் அவர் தன்வசம் வைத்திருந்த  அறிவுறுத்தல் துண்டுக்குறிப்பை தவறுதலாகக் காண்பித்திருந்தார்.

அத்துடன் அவர்  கடந்த வருடம் ஜூலை மாதம் இணையத்தள நேரடி  ஒளிபரப்புக் கூட்டமொன்றில் கலந்துகொண்ட போது அவரது நாடியில் ஏதோ ஒட்டியிருப்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் அவரது  உதவியாளரால் வழங்கப்பட்ட துண்டுக் குறிப்பை புகைப்படக்கருவிகளுக்கு காண்பித்திருந்தார். அத்துடன் அவர் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும்  தனது உத்தியோகபூர்வ முதலாவது ஊடகவியலாளர் கூட்டத்திலும் தனது கையிலிருந்த குறிப்புகளை தவறுதலாகப்  புகைப்படக்கருவிகளுக்குக் காண்பித்திருந்தார்.

அவரது மேற்படி செயற்பாடுகளானது  80 வயதை நெருங்கும் அவரது  உடல் நலன் மற்றும் மன ஆரோக்கிய நிலை குறித்துக் கவலையைத் தோற்றுவிப்பதாக உள்ளதாக  ஊடகங்கள் விமர்சித்துள்ளன. ஆனால் வெள்ளை மாளிகை மேற்படி விமர்சனங்களுக்கு நிராகரிப்பை வெளியிட்டு வருகிறது.

Tamil News