பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு கடன்வழங்குனர்கள் இணங்கியுள்ளமையை ஜப்பான் வரவேற்றுள்ளது.
கோவிட் – 19 பெருந்தொற்று மற்றும் உக்ரைன் – ரஷ்ய போர் ஆகியவற்றுக்கு மத்தியில் கடன்சார் நெருக்கடிகளின் விளைவாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜப்பான் நிதியமைச்சர் ஷூனிச்சி சுஸூகி சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உதவும் நோக்கில் அண்மையில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக அறிவித்துள்ள “ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை” பெரிதும் வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்காலக் கடன் நெருக்கடிகளைத் தடுப்பதற்கு கடன்சார் தரவுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியமான தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவது இன்றியமையாததாகும் என்றும் ஜப்பான் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இவற்றுக்கு மேலதிகமாக காலநிலை மாற்றம் சார்ந்த சவால்களைக் கையாள்வதற்கு ஆசிய – பசுபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு உதவும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய செயற்திட்டமொன்றின் ஊடாக 25 மில்லியன் ரூபாவை வழங்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்திட்டத்தின்கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் எட்டப்பட்ட நிலையில், கடன் மறுசீரமைப்பு குறித்த செயற்திட்டத்தை ஏப்ரல்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார். இருப்பினும் அச்செயற்திட்டம் கடந்த மாதம் வெளியிடப்படாத நிலையில், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.