வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நிதியுதவி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 6 இலட்சத்து 48 ஆயிரத்து 148 அமெரிக்க டொலர்களை சுரங்க ஆலோசனைக் குழு (MAG) வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம், ஜப்பானின் தூதுவர் Mizukoshi Hideaki மற்றும் சுரங்க ஆலோசனைக் குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் Cristy McLennan ஆகியோருக்கு இடையில் மானிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பானின் உதவியுடன் சுரங்க ஆலோசனைக் குழுவால் அமுல்படுத்தப்பட்ட 14ஆவது கண்ணிவெடி அகற்றும் திட்டம் இதுவென ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டமானது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேலதிகமாக 259,464 சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றவுள்ளது.

குறித்த அகழ்வாராய்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பான நிலங்களாக மாற்றுவதுடன், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 7,424 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முந்தைய 13 திட்டங்கள் 15 ஆயிரத்து 831 கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிகுண்டுகளை அகற்றியுள்ளன என்றும் ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.