இலங்கையின் பொருளாதாரம் 2023ஆம் ஆண்டு வழமைக்கு திரும்பும் என நம்புவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 73.7 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 70.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உணவுப் பணவீக்கம் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 85.8 சதவீதமாக காணப்பட்ட நிலையில், அது அக்டோபர் மாதத்தில் 80.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
உணவல்லா பணவீக்கம், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 62.8 வீதமாக காணப்பட்டதுடன், அது அக்டோபர் மாதத்தில் 61.3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மாதாந்த அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம், அதன் அண்மைய மிதமடைதல் போக்கினைத் தொடர்ந்து, 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 0.28 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது.
0.41 சதவீதமாக காணப்பட்ட உணவு வகையிலுள்ள பொருட்களின் மாதாந்த விலைகளில் வீழ்ச்சி, இதற்கு பிரதானமாகப் பங்களித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.